Skip to main content

பவுலும் - தர்சு நகரும் (பவுலின் வாழ்க்கை)

 


பவுலின் வாழ்க்கையை அறிந்து கொள்ள அவரது கடிதங்கள், அப்போஸ்தல நடபடிகள் ஆகியவைகள் மட்டுமே நமக்கு ஆதாரங்களாக உள்ளன. இவைகளின் பவுலின் கடிதங்களை முதன்மையான ஆதாரமாகக் கொள்ளலாம். இவைகளின்று பவுலின் வாழ்வில் ஆங்காங்கே நடந்த நிகழ்ச்சிகளை மட்டுமே நாம் அறிய முடியும். அப். 7:58ல் பவுல் ஓர் வாலிபனாகவும், பிலமோன் 9ல் வயதுமிக்கவராகவும் கூறப்படுகின்றார். இந்த இரு நிலைகளுக்கு முன்னும், பின்னும் எவை எவை நடந்தன என்று ழுழுமையாகக் கூற நமக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.

பவுல் ஒரு பரிசேயன்

கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் இனத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர் பவுல். எபிரேயருக்குப் பிறந்த எபிரேயன். பக்தியும், செல்வமும் மிக்கக் குடும்பத்தில் தோன்றினவர். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பக்தியிலும் பாரம்பரியத்தினும் சிறந்த பரிசேயக் குழுவைச் சேர்ந்தவர். யூத ஒழுங்கின்படி எட்டாம் நாளில் விருத்தசேதனம் பெற்றவர் (பிலி. 3:5 மு; ரோ. 11:1) இவருடன் சகோதரிகளும் இவருக்கு இருந்தார்கள் (அப் 23 : 16) 

பவுலின் வாழ்விடம் :-

பவுல் வாழ்ந்த தர்சு நகரம் சின்ன ஆசியாவின் தென்கரையில் அமைந்திருந்த சிலிசியா நாட்டில் இருந்தது. (அப். 22 : 3). இது சிலிசியா நாட்டில் பெயர் பெற்ற நகரம். (அப். 21; 39). இது செல்வமும் கல்வியும் செழித்தோங்கி, கிரேக்க நாகரிகமும், கிழக்கத்திய நாகரிகமும் சந்திக்கும் இடமாய்த் திகழ்ந்தது. இந்நகரம் அந்தியோகு எப்பிபானசு iv (கி. மு. 175-164) என்பவரின் காலத்தில் கிரேக்கக் கலாச்சாரத்தில் சிறந்த நகராக்கப்பட்டதாகச் சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன.

கி. மு. 171ல் தொழில் வியாபாரம் ஆகியவைகளுக்கு ஊக்கமளிக்கும் பொருட்டு யூதக்குடியிருப்பு (Jewish Colony) ஒன்றையும் எப்பிபானாசு உருவாக்கினார். கி. மு. 66ல் பாம்பி சின்ன ஆசியாவைக் கைப்பற்றி, அதைத் திருத்தி அமைத்த போது தர்சு நகரைத் சிலிசியாவின் தலை நகராக்கினார். முதல் நூற்றாண்டில் ஸ்தோயிக்க, எப்பிக்கூரர் தத்துவ மேதைகள் இந்நகரில் நிறைந்து காணப்பட்டார்கள். இவர்கள் தங்களின் தத்துவக் கருத்துக்களை மக்களுக்குப் புகட்டி, வந்தார்கள். ரோமப் பேரரசர்களான சிசரோ , ஜுலியஸ், சீசர், அகஸ்து போன்றவர்கள் இந்நகரை அடிக்கடி பார்வையிட்டார்கள் என்பதிலிருந்து இந்நகரின் சிறப்பையும், வனப்பையும் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இந்நகரில் கிரேக்கர்களுக்கே உரித்தான விளையாட்டு அரங்கங்கள், பல்கலைக் கழகங்கள் பல இருந்தன.

பவுலின் பெற்றோர் சொந்தநாடான பலஸ்தீனாவில் கிஸ்காலா என்னுமிடத்திலிருந்து வெளியேறி, யூதரல்லாதவர்கள் வாழ்ந்த நகரான தர்சுவில் குடியேறினார்கள் என்று ஜெரோம் குறிப்பிடுகின்றார். கிஸ்காலா ரோமரை கடைசியாக எதிர்த்துப் போரிட்ட கலிலேயாவிலுள்ள ஓர் இடம். ஆனால் ரோமர்கள் வெற்றிபெற்றதால், இங்கு வாழ்ந்தவர்களைக் கைதியாக்கி, அவர்களைப் பல்வேறு இடங்களில் குடியேற்றினார்கள். பவுலின் பெற்றோரும் இத்தருணத்தில் சிறையாக்கப்பட்டு தர்சுவில் குடியேற்றப்பட்டார்கள் என்று பிரடரிக் பாரர் கூறுகின்றார்.

பவுல் 12 முதல் 20 வயதாயிருக்கையில் தர்சுவில் குடியேற்றப்பட்டார் என்று ஜெரோம் கூறும் கருத்தை செயூன் கிம் (Seyoon Kim) என்பவர் மறுக்கின்றார். மிஷ்னா ஒழுங்கின்படி, ஒருவன் 15 வயதாயிருக்கும் போது தான், யூதரபிக்குரிய சமயக் கல்வியைப் பயில சேர்த்துக் கொள்ளப்படுவான் (Aboth 5:21). பவுல் தனது யூதச் சமயக் கல்வியைப் பேராசிரியர் கமாலியேலிடத்தில் தனது 15 வயதில் தான் படிக்க துவங்கி இருப்பார் என்று இவர் கூறி, ஜெரோம் சொல்லுகிறபடி 15 முதல் 20 வயதில் பவுல் தர்சு போயிருக்க வேண்டும் என்பதை மறுக்கின்றார்.

பவுலின் பெற்றோர் பவுலின் எந்த வயதில் தர்சு நகர் சென்றார்கள் என்பதைத் திட்டமாகக் கூற இயலாவிட்டாலும், அவர்கள் பலஸ்தீனாவிலிருந்து தர்சுவிற்கு குடிபெயர்ந்து சென்றவர்கள் என்பதற்கு அப். 23: 16 துணை புரிகின்றது.


Comments

Popular posts from this blog

பவுலின் பிறப்பு - பவுல் வாழ்க்கை வரலாறு (1)

  பவுலின் காலக் குறிப்புகள் பவுலின் கால நிகழ்ச்சிகளைப்பற்றிய திட்டமான ஆதாரம் இல்லாததால் இதுகாறும் ஓர் திட்டனை கால அட்டவனையை உருவாக்குவதில் அறிஞர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பவுல் முதல் நூற்றாண்டில் சேர்ந்தவர் என்பதும் , ரோம அரசாட்சியின் போது வாழ்ந்தவர் என்பதும் உறுதி. எனவே பவுலின் காலத்தில் , பவுலோடு தொடர்பாக ரோம அரசின் வரலாற்றில் நடந்த ஓரிரு நிகழ்ச்சிகளைப் பவுலின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு , ஓரளவுக்குப் பவுலின் காலத்தைக் கணிக்கலாம்.     பவுலின் பிறப்பு பவுல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த போதிலும் அக்காலத்தில் பாலஸ்தீனாவிலிருந்து இயேசுவைச் சந்தித்ததாக எவ்வித குறிப்பும் அவரது கடிதங்களில் இல்லை. 2 கொரி 5 :16 ன் அடிப்படையிலும் கூட பவுல் இயேசுவைச் சந்தித்தித்திருப்பார் என்று சொல்ல வாய்ப்பில்லை. அப். 7:58, பிலமோன் 9 ஆகிய வசனங்களின் அடிப்படையில் பவுல் கி. பி. 10 க்குப் பின்னர் பிறந்திருக்க முடியாது என்கிறார் ஜோசப் பிட்ஸ்மயர் என்ற அறிஞர். ஏனென்றால் அப்போஸ்தல நடபடிகள் நூலின் படி பவுல் இளைஞன். பிலமோனின் படி பவுல் வயதானவர். பிட்ஸ்மயரின் கருத்துப்படி...

பவுலின் மனமாற்றம் - பவுல் வாழ்க்கை வரலாறு (2)

  பவுலின் இளமைக் காலத்தைப்பற்றிய குறிப்பை அப்போஸ்தலர் நடபடிகள் நூல் தருவதாக மேலே கண்டோம். அதாவது சவுல் இளைஞனாயிருந்தபோது ஸ்தேவானின் மரணத்தில் பெரும் பங்கு வகித்தார் (அப். 7:58; 22:20). ஸ்தேவானின் மரணம் நடந்தது மார்சிலஸ் என்பவர் யூதேயாவின் ஆட்சியாளாக இருந்தபோதுநடந்தது. மார்சிலசுக்கு முன் மாகாணத் தலைவராக இருந்த பொந்தியு பிலாந்து என்பவர் ஆட்சியாளராக இருந்தார். ஆனால் சிரியாவின் உயர் நிலைத் தூதுவர் ( Legate) பிலாத்துவின் மேல் வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் , பிலாத்துவை ரோமாபுரிக்குப் பேரரசனிடம் விசாரணைக்காக அனுப்பிவிட்டு பிலாத்துவுக்குப் பதிலாக மார்சிலஸ் என்பவரை நியமித்தார். இவர் பதவி ஏற்ற காலம்கி.பி 36. இந்த ஆண்டில் தான் ஸ்தேவானின் மரணமும் அதைத் தொடர்ந்து , பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதும் நடந்திருக்க வேண்டும். (அப். 83). பவுலின் தமஸ்கு பயணமும் , அதைத் தொடர்ந்து பவுலின் மனமாற்றமும் கி. பி. 36 ல் நடந்ததாகக் கணிக்கலாம். இந்தக் கணிப்பு ரோமச் சரித்திரத்துடன் நெருங்கியத் தொடர்புடையது. இதன்படி , பவுல் எருசலேம் மன்றத்திற்குச் சென்ற ஆண்டும் கி பி , 49 உடன் ஒத்துப் போகின்றது. ...