அரேபியாவில் சிறிது காலத்தைச் செலவிட்ட பின்பு நேரே
தமஸ்கு நோக்கிப் பவுல் சென்றார். தமஸ்குவிற்கு இப்போது கிறிஸ்தவர்களைத்
துன்புறுத்த அல்ல,
கிறிஸ்துவை
அறிவிக்கச் சென்றார். தமஸ்குவிற்குப் பவுல் சென்ற காலம் கி. பி. 36/37 எனலாம். இங்கு
சீடர்களுடன் தங்கி,
தொழுகைக் கூடங்களுக்குச்
சென்று, கிறிஸ்துவை அறிவித்தார்.
(அப். 9:20-22)
அப்போஸ்தலர் நடபடிகள் நூலின்படி "பல
நாட்கள்" மட்டுமே பவுல் இங்கு தங்கினார் (அப், 9:23), ஆனால் பவுலின் நிருபத்தின்படி
மூன்று ஆண்டுகள் தங்கினார் (கலா. 1:18). இதில் பவுல் குறிப்பிடுவதே
சரியெனக் கொள்ளலாம். ஏனென்றால்
பவுல் எருசலேம் செல்லாமல், தமஸ்குவிலேயே மூன்று ஆண்டுகள்
தங்கி இருந்ததால் தான் யூதேயாவிலிருந்த கிறிஸ்தவ திருச்சபை மக்கள் பவுலை அப்போதும்
அறிந்துகொள்ள இயலாமல்,
இருந்தார்கள்
(கலா. 1:22-23).
எனவே பவுல்
தமஸ்குவில் இருந்த காலம் மூன்று ஆண்டுகள் என்றும், அது கி. பி. 37-40 என்றும் குறிக்கலாம்.
பவுல் தமஸ்குவில் இருந்தபோது, அல்லது அரேபியாவின் பாலைவனப்
பகுதிகளில் எசனேயர்களை அல்லது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட எசனேயர்களைச் சந்தித்து
இருக்கலாம் என்பதை பவுலின் நிருபங்கள் வெளிப்படுத்துகின்றன. பவுலின் கடிதங்களில் கும்ரான்
சமூகத்தினரிடையே காணப்பட்ட இருமைக்கோட்பாடு, விண் தூதர்கள், கடவுளின் இரகசியம் போன்ற பல
கருத்துக்கள் காணப்படுகின்றன.
Comments
Post a Comment