பவுலின் இறையியலுக்குரிய பின்னணியங்களைப் பற்றி
அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. ஒரு சிலர் பவுலின் இறையியலுக்கு
பலஸ்தீனா யூதப் பின்னணியம் மட்டுமே முற்றிலும் துணை புரிந்தது என்கின்றார்கள்.
இப்படிக் கூறுவதில் D.
E H ஒயிட்லியும்
ஒருவராவார். வான் உன்னிக் (van
Unnik) என்பவர், பவுலின் பின்னணியம் தர்சு
அல்ல எருசலேமே என்கிறார். ஆனால் புல்ட்மான் என்பவரும், மோன்டிபயர் என்ற யூத அறிஞரும், பவுலின் கிரேக்கப்
பின்னணியத்தை வலியுறுத்துகின்றார்கள். புல்ட்மான் என்பவர், பவுல் வாழ்ந்த தர்சுவும், அங்கு நிலவிய கலப்புச்
சமயக் கருத்துக்களும்,
கிரேக்கக்
கலாச்சாரமும் பவுலின் பின்னணியம் என்கிறார்.
புல்ட்மான் பவுலின் கிரேக்கப் பின்னணியத்தை
வலியுறுத்தினாலும்,
பவுல்
கிறிஸ்துவை ஏற்குமுன் எந்த அளவிற்கு கிரேக்கச் சமயக் கருத்துக்களை அறிந்திருந்தார்
என்பதைத் திட்டமாகக் கூறமுடியாது என்கிறார். மேலும் பவுலின் நிருபங்களை நோக்கினால், அவர் பலஸ்தீனா யூதச்
சமயத்தினின்று மிகக்குறைவான அம்சங்களையே எடுத்தாண்டிருக்கின்றார் என்பது விளங்கும்
என்கிறார். ஆனால் W.
D. டேவிஸ் என்பவர்.
பவுலுக்கு யூதப் பின்னணியமே அதிகம் துணை புரிந்து என்றும், கிரேக்கத் தாக்கம் (Hellenistic
influences) பவுலின்
சிந்தனையில் மேற்பரப்பாக மட்டும் இருந்ததேயன்றி, அதுதான் அடித்தளம் என்று சொல்ல
முடியாது என்கிறார். இவ்வாறு ஒரு சாரார் பவுலின் யூதப் பின்னணியத்தையும், மறு சாரார் கிரேக்கப்
பின்னணியத்தையும் வலியுறுத்துகின்றார்கள். ஆயினும் பவுலுக்கு ஒரே ஒரு பின்னணியம்
தான் உதவியது என்று முடிவெடுப்பது சரியாகாது. அப்படி முடிவெடுத்தால் பவுலைச்
சரியாகப் புரிந்து கொள்ளவும் முடியாது.
பவுல் யூதரல்லாதாரிடையே வாழ்ந்திருந்தாலும், ஆர்வம் மிக்க யூதனாக
வாழ்ந்தார் என்பதும்,
அவர் யூதத்
திருமறை,
பழக்க
வழக்கங்கள் ஆகியவைகளை ஒருபோதும் விட்டுவிடவில்லை என்பதும் உண்மை. ஆயினும் அதே
நேரத்தில் யூதரல்லாதாரிடையேயிருந்தும் பவுல் பல காரியங்களை அறிந்திருந்தார்.
அவைகளையும் தனது இறையியலைக் கட்டி எழுப்பப் பயன்படுத்தினார் என்பதும் உண்மையே.
யூதரல்லாதாரிடையே பவுல் கற்றவற்றையெல்லாம் அப்படியே
கூறி விடாமல்,
கிறிஸ்தவக்
கருத்தை விளக்கிக் காட்டுவதற்காக மட்டுமே
அவைகளைத் தேவைப்பட்ட போது பயன்படுத்தினார். ஆகவே புறவினச் சமயங்களில் ஆர்வமோ
அல்லது நாட்டமோ கொண்டு அவைகளைத் தன் இறையியலில் பயன்படுத்தாமல், யூதரல்லாதாருக்குத்
தெரிந்த ஒன்றை எடுத்து அதன் வாயிலாக கிறிஸ்தவக் கருத்தை வலுயுறுத்தினார் என்பதே
சாலப் பொருந்தும்.
Comments
Post a Comment