Skip to main content

பவுலின் யூதப் பின்னணியம் (பவுல் பயன்படுத்திய இறையியல் மூலங்கள்)

 

பவுலின் இறையியலில் பல பின்னணியங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் யூதப் பின்னணியமே விஞ்சி நிற்கின்றது என்பது தெளிவு. பவுல் வாழ்ந்த காலத்தில் யூதர், யூதரல்லாதார் என இரு சாரார் வாழ்ந்து வந்தனர். இவர்கள் சமய, சமூக அற நெறிகளைப் பொறுத்தமட்டில் வேறு பட்டிருந்தாலும் ஒருவரிடமிருந்து ஒருவர் பல காரியங்களைப் பகிர்ந்துக் கொண்டிருந்தனர் என்பது மறுக்கப்படாத உண்மை. மக்கபேயர் காலத்தில் நடைபெற்ற மக்கபேயர் போர் அன்னியர்களான சீரியர்களை எதிர்ப்பதற்காகவும், அதே நேரத்தில் புறவினச் சமயங்களின் கலாச்சாரத்தையும், முறைமைகளையும் ஏற்க முனைந்த யூதர்களுக்கு எதிராகவும் நடந்த யூதப்போர் என்றால் மிகையாகாது.

சைரஸ் எச். கோர்டன் (Cyrus H. Gordon) என்பவர் தாம் எழுதிய Before the Bible என்ற நூலில் இவற்றை தெளிவாக விளக்கிக் காட்டியிருக்கின்றார். 'சனகரிம்' என்ற கிரேக்கச் சொல்லால் தான் யூதர்களின் தலைமைப் பேரவையே அழைக்கப்பட்டது. பரூசீயர், என்ற கிரேக்கச் சொல்லை எடுத்து அதன் மூலம் யூதக்கருத்து வெளிப்படுத்தப்பட்டது. என்கிறார் டுபோண்ட் (Dupont).

யூத இலக்கியமான தால்மூத்-ல் 1100 க்கு மேலான கிரேக்கச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்கிறார் J. பொன் சீர்வென் (J. Bonsirven). w D. Davies என்பவர் எருசலேமில் புறவின் தொழுகைக் கூடம் (Hellenist - Synagogue) இருந்தது என்றும் (cf. அப். 6 : 9) யூத மன்றாட்டுகளும் கிரேக்கத்திலேயே எழுதப்பட்டுப் படிக்கப்பட்டதாகவும் கூறுகின்றார்.

யூதர் யூதரல்லாதாரிடையே இவ்வித சமய கலாச்சாரக் கலப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. பலஸ்தீனா நாடுகி.பி333லிருந்து கிரேக்கரின் ஆட்சிக்கும், கி. மு. 63லிருந்து ரோமரின் ஆட்சிக்கும் உட்பட்டிருந்ததால் கிரேக்க, ரோமக் கலாச்சாரங்கள் பலஸ்தீனாவிற்குள் வர வழி இருந்தது. பல அரசர்களும் (அந்தியோகு எபிபானஸ்) ஆளுநர்களும் (பிலாத்து) வலிய தங்கள் கலாச்சாரத்தையும், சமயத்தையும் யூதர் மீது திணித்தனர் என்பது சரித்திரம் கூறும் உண்மை . மேலும் சிதறி வாழ்ந்த யூதர்கள் (Diaspore Jews) மூலம் இது அதிக அளவில் பரவ வாய்ப்பிருந்தது.

பலஸ்தீனாவை விட்டு வேற்று இடங்களில் வாழ்ந்த யூதர்கள் முப்பெரும் யூதப் பண்டிகைகளின் போதும், மற்ற நேரங்களில் எருசலேம் வந்த போது அவர்கள் மூலமும் கிரேக்க கலாச்சாரமும், பண்பாடும் பலஸ்தீனாவிற்குள் புகுந்தது. இவ்வாறாக யூத கிரேக்க பழக்க வழக்கங்கள் பிண்ணிப் பிணைந்திருந்ததால், பவுல் கிரேக்க பழக்க வழக்கங்களை கிரேக்கரிடமிருது தான் கற்றிருக்க வேண்டுமென்று கூறாமல், அவைகளை யூதர்களிடமிருந்தும் கற்றிருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என நினைக்க வழியுண்டு. இனி பவுலுக்கு எந்தெந்த பிண்ணனியங்கள் அவரது இறையியலுக்கு ஆதாரமாய் அமைந்தன என காண்போம். 

யூதப் பின்னணியம்

யூதப் பின்னணியம் பவுலுக்கு பெருமளவுக்கு உதவியது. யூதப் பின்னணியம் எனும் போது எந்த யூதப் பின்னணியம் என்பது அறிஞர்களிடையே எழும் பிரச்சனை. சிலர் பலஸ்தீனா யூதச் சமயம் (Palestine Judaism) என்றும், வேறு சிலர் கிரேக்க யூதச் சமயம் (Hellenistic Judaism) என்றும் வாதிடுவர்.

C. G. மாண்டிபயர் (C. G. Montefiore) - என்பவர் Judaism and Paul என்ற தனது நூலில், பவுலின் பல இறையியல் கருத்துக்கள் முதல் நூற்றாண்டில் நிலவிய யூத ரபிகளின் இலக்கியத்திற்கு வேறுபட்டது. ஆகையால் பவுலின் கருத்துக்களை கிரேக்க யூதச் சமயத்தின் பின்னணியத்தால் மட்டுமே விளக்கிக் காட்டமுடியும் என்கிறார். மேலும் இவர் கூறுவதாவது, ரபிகளின் பல சிறந்த இலக்கியங்கள் 2ம் 3ம் நூற்றாண்டுக்குரியவைகள், (எ. கா) மிஷ்னா இரண்டாம் நூற்றாண்டுக்குரியது. எனவே முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பவுலால் இவைகளைப் பயன்படுத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்.

மேலும் மிஷ்னாவில், முதல் நூற்றாண்டில் பெரும் பங்கை வகித்த சதுசேயர்களைப் பற்றிய குறிப்புகள் விடப்பட்டிருக்கின்ற படியினால், ரபிகளின் நூற்களிலும் கூட முதலாம் நூற்றாண்டில் என்ன நடந்தது என்று கண்டுகொள்ள முடியாது என்பதும் இவரது வாதம்.

பவுல் பாலஸ்தீனாவிலிருந்த ரபிகளின் யூதச் சமயத்தினின்று அல்ல, மாறாக கிரேக்க பண்பாடு கலந்த யூதச் சமயத்தினின்று கற்றவைகளினின்றே தன் இறையியலை அமைத்தார் என்கிறார் மாண்டிபயர். காரணம் ரபிகளின் பாலஸ்தீன யூதச் சமயம் கடவுள் அன்பும், இரக்கமுமுள்ளவர் திருச்சட்டம் மகிழ்ச்சிக்குரிய ஒன்றேயல்லாமல் பாரமான ஒன்றானது அல்ல. திருச்சட்டத்தைக் கைக்கொள்ளாமல் போகும் போது கடவுளுக்கு ஏற்படும் கோபத்தைக் காட்டிலும் அவரது இரக்கம் அதைவிடப் பெரியது.

இந்த உலகம் கெட்டது அன்று நல்லது. இந்த உலகின் பொருட்களின் மூலம் கடவுள் மகிழ்ச்சி அருளுகின்றார் என்று போதித்தது. ஆனால் கிரேக்கப் பண்பாடு கலந்த யூதச்சமயம் கடவுளின் அன்பை மிகைப்படுத்தவில்லை. அதோடு கடவுள் தூரமானவர். அவர் தூரமானவராதலால் எளிதில் அவரோடு உறவு கொள்ள இயலாது. உலகம் கெட்டது என்று போதித்ததோடு, மனிதனின் மனந்திருப்புதல், கடவுளின் மன்னிப்பு ஆகியவை வலியுறுத்தப்படவில்லை. சுருங்கக்கூறின், எல்லா வற்றையும் குறித்த ஒருவித தாழ்வு மனப்பான்மையும், கெடுதலையே காணும் மனப்பான்மையுமே நிலவியது.

எனவே திருச்சட்டத்தைப் பற்றி தாழ்வான எண்ணம், மனந் திரும்புதலைப் பற்றி பேசாமலிருப்பது, உலகத்தைப் பற்றிய தாழ்வான எண்ணம். கடவுளைக் கோபமுள்ளவராகக் கருதுவது ஆகிய இக்கருத்துக்களைப் பவுல் ரபிகளின் யூதச் சமயத்தினின்று எடுக்காமல், சிதறி வாழ்ந்த கிரேக்க பண்பாடு கலந்த யூதச் சமயத்தினின்றே எடுத்தார் என்பது தெளிவாகுகின்றது என்கிறார் C. G. மாண்டிபயர். இவருடைய கருத்துக்கு ஆதரவாக ராலின்சன் (Raulinson) பூசட் - (Bousset) போன்றோர் அப். 22:3ன்படி பவுல் எருசலேமில் தங்கியிருந்தார் என்பதையும் கமாலியேலிடத்தில் கல்வி கற்றார் என்பதையும் மறுத்து, பவுலின் மன மாற்றத்திற்கு முன் பவுலுக்கு எருசலேமோடு தொடர்பிருந்திருக்க முடியாது. என்று கூறுகின்றார்கள்.

 2கொரி. 11:22; பிலி 3:5மு ஆகிய பகுதிகள் பவுலின் எதிரிகள், பவுலுக்கும் பாலஸ்தீனா நாட்டு யூதச் சமயத்திற்கும் தொடர்பில்லை என்று கூறியபோது அதற்குப் பதிலாக பவுல் எதிர் வாதம் செய்தபோது கூறப்பட்டவைகள் என்கின்றார்கள். 

ஆல்பர்ட் ஸ்வைட்சர் என்பவர், மறைபொருள் வெளிப்பாட்டு யூதச் சமயத்தை (Apocalyptic Judaism) யூதச் சமயத்தினின்று வேறுபட்டது எனக்கூறி, இந்த மறை பொருள் வெளிப்பாட்டு யூதச் சமயமே பவுலின் சிந்தனைக்கு ஊற்றாயிருந்தது என்கின்றார். பவுலுக்கு யூதப் பின்னணியம் உதவியது என்பதை ஒத்துக் கொண்டாலும், எந்த யூதப் பின்னணியம் என்பதைப் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகின்றது என்பதை மேலே கண்டோம். இனி எந்தப் பின்னணியம் பவுலுக்குப் உறுதுணையாக இருந்தது என்பதைக் ஈண்டு காண்போம்.

மேலே கண்ட மாண்டிபயரின் கருத்துப்படி, பவுலுக்கு கிரேக்க பண்பாடு கலந்த யூதப் பின்னணியமே துணை புரிந்தது என்ற கருத்து முற்றிலும் சரியாகாது. ஏனென்றால் பவுல் கிரேக்கப் பண்பாடு கலந்த யூதச் சமயத்தின் வழியாகத்தான் அல்லது அதைமட்டுமே அறிந்திருந்ததால் தான் திருச்சட்டத்தை குறைத்து மதிப்பிட்டார்.

கடவுள் உறவுகொள்ள முடியாத நிலையில் தூரத்தில் உறைந்திருப்பவராக கண்டார். இவ்வுலகத்தைப் பற்றிய தாழ்வான எண்ணம் கொண்டார் என்று கூறமுடியாது. பவுலுக்கு முந்தியதும் யூத ரபியால் எழுதப்பட்டதுமான நான்காவது எஸ்ரா என்ற யூத இலக்கியத்திலேயே திருச்சட்டத்தைக் குறைத்து மதிப்பிடும் தன்மை காணப்படுகின்றது. இந்நூலில் திருச்சட்டத்தை இஸ்ரவேல் மக்களுக்கு கடவுள் அளித்த தெய்வீக பரிசு என்று கூறினாலும் அத்திருச்சட்டம் பாவிகளை மீட்க இயலாது என்றும் கூறுகின்றது. (4 எஸ்ரா 3:19மு 9:31-36, காண்க. ரோ. 3:20). எனவே திருச்சட்டத்தை குறைத்து மதிப்பிடும் தன்மை கிரேக்க பண்பாடு கலந்த யூதச் சமயத்தில் தான் காணப்பட்டது என்பதை விட அப்படிப்பட்ட எண்ணம் பலஸ்தீனா யூதச் சமயத்திலேயும் இருந்தது என்றும் பவுல் பலஸ்தீனா யூதச் சமயத்தினின்றே இக்கருத்தை எடுத்தாண்டிருக்க வாய்ப்புண்டு என்பதும் தெளிவாகின்றது.

அடுத்து, மாண்டிபயர் கூறும் வண்ணம் பலஸ்தீனா யூதச் சமயத்தில் தான் கடவுள் நெருக்கமானவர், பாசமிக்கவர். ஆனால் கிரேக்கபண்பாடு கலந்த யூதச் சமயத்தில் கடவுள் நெருங்கி உறவாட முடியாதவர் என்னும் இந்தக் கருத்தும் பொருந்தாத கருத்து. ஏனென்றால் அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்தவரும், கிரேக்க பண்பாட்டு யூதச் சமயத்துக்குரியவருமாகிய பைலோ என்ற யூத அறிஞர்கடவுளை ஓட்டகந்தைக்கு ஒப்பிட்டு, அவரது நூற்களில் அடிக்கடி அவ்வாறு வர்ணித்துப் பேசுகின்றார். இதனால் கடவுள் உறவு கொள்ள முடியாத தூரத்தில் உறைந்திருப்பவர் என்றில்லாமல் உறவு கொள்ளும் அளவுக்கு நெருக்கமானவர் என்ற கருத்து கிரேக்க பண்பாடு கலந்த யூதச்சமயத்திலும் இருந்தது என்பது தெளிவாகின்றது.

இவ்வுலகைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையும் கூட பலஸ்தீனா யூதச் சமயத்திலேயே இருந்தது. 4 எஸ்ரா என்ற நூலில், படைப்பின் இளமை நீங்கி அது பழமையாகி விட்டது என்ற கருத்து இவ் உலகத்தின் தாழ்ந்த நிலையை காட்டுகின்றது (4 எஸ்ரா 5:55). ஹில்லேல், ஷம்மாய் ஆகிய கழகத்தினரும் இக்கருத்தைக் கொண்டிருந்தனர். எனவே பவுலிடம் காணப்படும் இவ்வெண்ணத்தை அறிய யூதச் சமயத்துக்கு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இதே போன்று மறை பொருள் சமயத்தின் கருத்தும் யூதச் சமயத்திற்குள்ளேயே காணப்பட்டது. கிறிஸ்தவத்திற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்திய ஏனோக்கு, 4 எஸ்ரா ஆகிய நூற்களில் மறைபொருளைப் பற்றிய கருத்து காணப்படுகின்றது. எக்லேசியாஸ்டிக்கஸ் என்ற நூல் இக்கருத்துக்கு எதிராக பேசுவதின் மூலமே (3:22), இது யூதச் சமயத்தில் காணப்பட்ட ஓர் கருத்து என்பது தெளிவு. பரிசேயர்களுக்குள்ளும் பல மறைபொருள் வாதிகள் இருந்தனர். ரபிகள் இத்தகு மறைபொருள் அனுபவத்தை கொண்டிருந்தனர் என்பது யூத இலக்கியம் தரும் விபரம்.

எனவே பவுல் மறைபொருள் சமயங்களிலிருந்து அல்ல, பலஸ்தீனா யூதச் சமயத்தினின்றே இக்கருத்தை எடுத்தாண்டார் என்கிறார் W. D. Davies'. மேற்சொன்ன அனைத்தும் பவுலுக்கு யூதப் பிண்ணனியமே பெரிதும் உதவியது என்பதை தெளிவாக்குகின்றது.

Comments

Popular posts from this blog

பவுலின் பிறப்பு - பவுல் வாழ்க்கை வரலாறு (1)

  பவுலின் காலக் குறிப்புகள் பவுலின் கால நிகழ்ச்சிகளைப்பற்றிய திட்டமான ஆதாரம் இல்லாததால் இதுகாறும் ஓர் திட்டனை கால அட்டவனையை உருவாக்குவதில் அறிஞர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பவுல் முதல் நூற்றாண்டில் சேர்ந்தவர் என்பதும் , ரோம அரசாட்சியின் போது வாழ்ந்தவர் என்பதும் உறுதி. எனவே பவுலின் காலத்தில் , பவுலோடு தொடர்பாக ரோம அரசின் வரலாற்றில் நடந்த ஓரிரு நிகழ்ச்சிகளைப் பவுலின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு , ஓரளவுக்குப் பவுலின் காலத்தைக் கணிக்கலாம்.     பவுலின் பிறப்பு பவுல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த போதிலும் அக்காலத்தில் பாலஸ்தீனாவிலிருந்து இயேசுவைச் சந்தித்ததாக எவ்வித குறிப்பும் அவரது கடிதங்களில் இல்லை. 2 கொரி 5 :16 ன் அடிப்படையிலும் கூட பவுல் இயேசுவைச் சந்தித்தித்திருப்பார் என்று சொல்ல வாய்ப்பில்லை. அப். 7:58, பிலமோன் 9 ஆகிய வசனங்களின் அடிப்படையில் பவுல் கி. பி. 10 க்குப் பின்னர் பிறந்திருக்க முடியாது என்கிறார் ஜோசப் பிட்ஸ்மயர் என்ற அறிஞர். ஏனென்றால் அப்போஸ்தல நடபடிகள் நூலின் படி பவுல் இளைஞன். பிலமோனின் படி பவுல் வயதானவர். பிட்ஸ்மயரின் கருத்துப்படி...

பவுலும் - தர்சு நகரும் (பவுலின் வாழ்க்கை)

  பவுலின் வாழ்க்கையை அறிந்து கொள்ள அவரது கடிதங்கள் , அப்போஸ்தல நடபடிகள் ஆகியவைகள் மட்டுமே நமக்கு ஆதாரங்களாக உள்ளன. இவைகளின் பவுலின் கடிதங்களை முதன்மையான ஆதாரமாகக் கொள்ளலாம். இவைகளின்று பவுலின் வாழ்வில் ஆங்காங்கே நடந்த நிகழ்ச்சிகளை மட்டுமே நாம் அறிய முடியும். அப். 7:58 ல் பவுல் ஓர் வாலிபனாகவும் , பிலமோன் 9 ல் வயதுமிக்கவராகவும் கூறப்படுகின்றார். இந்த இரு நிலைகளுக்கு முன்னும் , பின்னும் எவை எவை நடந்தன என்று ழுழுமையாகக் கூற நமக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. பவுல் ஒரு பரிசேயன் .  கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் இனத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர் பவுல். எபிரேயருக்குப் பிறந்த எபிரேயன். பக்தியும் , செல்வமும் மிக்கக் குடும்பத்தில் தோன்றினவர். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பக்தியிலும் பாரம்பரியத்தினும் சிறந்த பரிசேயக் குழுவைச் சேர்ந்தவர். யூத ஒழுங்கின்படி எட்டாம் நாளில் விருத்தசேதனம் பெற்றவர் (பிலி. 3:5 மு ; ரோ. 11:1) இவருடன் சகோதரிகளும் இவருக்கு இருந்தார்கள் (அப் 23 : 16)  பவுலின் வாழ்விடம் :- பவுல் வாழ்ந்த தர்சு நகரம் சின்ன ஆசியாவின் தென்கரையில் அமைந்திருந்த...

பவுலின் மனமாற்றம் - பவுல் வாழ்க்கை வரலாறு (2)

  பவுலின் இளமைக் காலத்தைப்பற்றிய குறிப்பை அப்போஸ்தலர் நடபடிகள் நூல் தருவதாக மேலே கண்டோம். அதாவது சவுல் இளைஞனாயிருந்தபோது ஸ்தேவானின் மரணத்தில் பெரும் பங்கு வகித்தார் (அப். 7:58; 22:20). ஸ்தேவானின் மரணம் நடந்தது மார்சிலஸ் என்பவர் யூதேயாவின் ஆட்சியாளாக இருந்தபோதுநடந்தது. மார்சிலசுக்கு முன் மாகாணத் தலைவராக இருந்த பொந்தியு பிலாந்து என்பவர் ஆட்சியாளராக இருந்தார். ஆனால் சிரியாவின் உயர் நிலைத் தூதுவர் ( Legate) பிலாத்துவின் மேல் வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் , பிலாத்துவை ரோமாபுரிக்குப் பேரரசனிடம் விசாரணைக்காக அனுப்பிவிட்டு பிலாத்துவுக்குப் பதிலாக மார்சிலஸ் என்பவரை நியமித்தார். இவர் பதவி ஏற்ற காலம்கி.பி 36. இந்த ஆண்டில் தான் ஸ்தேவானின் மரணமும் அதைத் தொடர்ந்து , பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதும் நடந்திருக்க வேண்டும். (அப். 83). பவுலின் தமஸ்கு பயணமும் , அதைத் தொடர்ந்து பவுலின் மனமாற்றமும் கி. பி. 36 ல் நடந்ததாகக் கணிக்கலாம். இந்தக் கணிப்பு ரோமச் சரித்திரத்துடன் நெருங்கியத் தொடர்புடையது. இதன்படி , பவுல் எருசலேம் மன்றத்திற்குச் சென்ற ஆண்டும் கி பி , 49 உடன் ஒத்துப் போகின்றது. ...