பவுல் ஒரு பன்மொழிப் புலவர் என்றால் அது மிகையாகாது.
பவுல் ஒரு யூதனாக,
அக்காலப்
பேச்சு மொழியான அரமேயத்தைக் கற்றுப் பேசினார் என்பதில் ஐயப்பட அவசியமில்லை. தமஸ்கு
பாதையில் இயேசுவும் பவுலும் அரமேய மொழியிலேயே தொடர்பு கொண்டார்கள் என்பது பல
அறிஞர்களின் கருத்து. காரணம் அரமேய மொழிதான் இயேசுவும், பவுலும் வாழ்ந்த காலத்தில் யூதர்களுக்குப்
பேச்சு மொழியாக இருந்தது.
பவுல் தன்னை 'எபிரேயன்' (பிலி. 3:5) என்று அழைப்பதின் நோக்கம், தனக்கு அரமேய மொழியும், பலஸ்தீனாவின் கலாச்சாரமும்
தெரியும் என்று காட்டவே என்கிறார் செயூன் கிம் என்ற அறிஞர் C. F. D. மோல் என்ற அறிஞர்.
பவுல் தன்னை எபிரேயன் என்று குறிப்பிடுவதன் நோக்கம்
யாதெனில்,
தான் ஒரு
கிரேக்க மொழி பேசும் யூதன். ஆனாலும் தனக்கு அரமேய மொழியும் தெரியும் என்பதைச்
சுட்டிக் காட்டவே என்கிறார். பவுலின் எதிரிகளான கிரேக்க யூதர்கள் எருசலேமில்
இருந்த போது அரமேயத்தையும் கற்றிருந்தார்கள். இவர்கள் திரும்பவும் தங்கள் சொந்த
நாட்டிற்கு வந்தபோது. தாங்கள் அரமேய மொழியைக் கற்றிருந்ததன் அடிப்படையில் தங்களை
எபிரேயர்கள் என அழைத்துக் கொண்டார்கள். ஆனால் பவுலையோ குறைத்து மதிப்பிட்டார்கள்.
இவ்வாறு தன்னைக் குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு, பவுல் தானும் ஒரு எபிரேயன், தனக்கும் அரமேய மொழி
தெரியும் என்பதைக் காட்ட பவுல் இப்படிச் சொன்னார் என்கிறார் செயூன் திம்.
பவுல் கமாலியேலிடத்தில் கற்ற கல்வி சாதாரணக்
கல்வியன்று. அது யூத ரபி ஆவதற்குரிய கல்வி. அப்படியானால் எபிரேய மொழியில்
எழுதப்பட்டிருந்த திருமறையையும் வழிபாட்டு முறைமைகளையும் பவுல் கண்டிப்பாக
அறிந்திருப்பார். சில நேரங்களில் கிரேக்கத் திருமறையான செப்துவஜிந்திலிருந்து
மேற்கோள் காட்டுவதை விட்டு விட்டு, எபிரேயத்
திருமறையிலிருந்து பவுல் மேற்கோள் காட்டுவது இதை உறுதிப்படுத்துகின்றது. இதன்படி
பவுல் எபிரேய மொழியிலும் தேர்ச்சிப் பெற்றவராயிருந்தார் என்பது தெளிவாகின்றது.
(பிலி. 3
: 5; காண்க.
அப். 22
: 2).
பவுல் கிரேக்க மொழியிலும் வல்லுணராயிருந்தார் (அப். 21:37). பவுல் தான் வாழ்ந்த
பகுதியில் பிற மக்களோடு கிரேக்க மொழியிலேயே தொடர்பு கொண்டிருந்தார். ஏனென்றால்
கிரேக்கர்களுக்கு கிரேக்கமே அரசு மொழியாகவும், பேச்சு மொழியாகவும் இருந்தது.
பவுல் கிரேக்கத் திருமறையான செப்துவஜிந்திலிருந்து மேற்கோள்களைக் காட்டுவதாலும், தனது நிருபங்களைக்
கிரேக்க மொழியிலேயே எழுதுவதாலும்,
தனது
நிருபங்களில் கிரேக்க கவிஞர்களின் நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்தாள்வதாலும், பவுல் கிரேக்க மொழியில்
சிறந்த வல்லுனராக இருந்தார் என்பது விளங்குகின்றது. கமாலியேலிடத்தில் சமயக்
கல்வியைக் கற்றபோதே,
கிரேக்க
மொழியையும் பவுல் கற்றிருப்பார் என்கிறார் F. F. புரூஸ் என்ற அறிஞர்.
ஒருவர் ரோமக் குடியுரிமையைப் பெறவேண்டுமானால் கண்டிப்பாக
ஓரளவாவது இலத்தீன் மொழியைக் கற்றிருக்க வேண்டும் என்பது ரோம அரசு ஆணை. இதன்படி
பார்த்தால்,
பவுலும்
இலத்தீன் மொழியைக் கற்றிருந்திருப்பார் என்று அனுமாணிக்க இடமுண்டு .
Comments
Post a Comment