Skip to main content

பவுல் திருச்சபையை துன்புறுத்துதல் (பவுலின் வாழ்க்கை)

 

யூதச் சமயத்தினின்று புதிய கிளையாகத் தோன்றிய கிறிஸ்தவத்தை முளையிலேயே கிள்ளி எறிய விரதங்கொண்டவராகப் பவுல் தமஸ்கு நோக்கிச் சென்றார். மேசியா என்று ஒருவரை அறிவித்ததால் யூதர்கள் அல்லது பவுல் ஆத்திரப்பட்டிருக்கமாட்டார்கள். ஏனென்றால் பலர் மேசியாவாக அறிவிக்கப்பட்டிருக்கின்றார்கள். யூதர்களில் பலர் அவர்களை நம்பவும் செய்திருக்கின்றார்கள். கி பி. 132ல் தலை சிறந்த ரபியான -- R. அகீபா (R. Akiba) என்பவர் பார் கொக்பா என்பவரை மேசியாவாக அறிவித்தார். இப்படிப் பல சூழல்களில் நடத்திருக்கின்றது. ஆனால் மரத்திலே தூக்கி போடப்பட்ட, சாபத்துக்குரிய ஒருவரை மேசியா என்று கிறிஸ்தவர்கள் அறிவித்தது தான் பவுலுக்கு அதிக ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதோடு மேசியாவை ரோமர்களின் கையில் ஒப்புக்கொடுத்து சாகடிப்பதும் யூதர்களுக்கு ஒவ்வாத செயல் (அப். 5. 30மு; 10:39 மு; 13:29மு).

அப். 5:30; 10:39; 13:29; 1பேது.2:24 ஆகிய பகுதிகள் ஆரம்ப முதற்கொண்டே யூதர்கள் கிறிஸ்தவர்களை உபா.21:23ன் அடிப்படையில் துன்புறுத்தியிருக்கவேண்டும் என்பதைச் சுட்டுகின்றன.

யோ.16:2, 1கொ.12:3ல் இயேசு ஒழிக" என்ற குரல் யூதர்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியபோது எழுப்பிய குரல் என்று J. D. M டெரட் கூறுவதை செயூன் கிம் தம் நூலில் எடுத்துரைக்கின்றார். ஆனால் 'இயேசுவை ஆண்டவர்' என்ற அறிக்கை யூதர்களைப்பார்க்கிலும் ரோம அரசின் அதிகாரிகளுக்கே எரிச்சலை மூட்டியிருக்கும். ஏனெனில் ரோம பேரரசர்கள். தங்களை 'ஆண்டவர்' என்று அழைத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருசிலர் பவுல் தீவிரவாத இயக்கத்தைச் (Zealotic organization) சேர்ந்தவர் என்றும், ஆகையினால் தான் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார் என்றும் கூறுகின்றனர். ஆனால் பவுலே தான் பரிசேய வகுப்பைச் சேர்ந்தவன் என்று கூறுவதால் மேலே கூறிய வாதம் பொருந்தாமல் போகிறது. வேறுசிலர், கண்டிப்புமிக்க "ஷம்மாய்'' (Shammai) குழுவைச் சேர்ந்தவர் என்றும் ஆகவேதான் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார் என்றும் கூறுகின்றார்கள்.

J. ஏரமியாஸ் என்பவர், பவுலின் இறையியல் சிந்தனைகள், விளக்க உரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஹில்லேல்" (Hillelகுழுவைச் சார்ந்தவர் பவுல் என்கிறார். எது எப்படி இருப்பினும், பவுலின் சமயப்பற்றார்வமே அவர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தக்காரணமாய் அமைந்தது என்பதே சாலப்பொருந்தும். அப்போது தலைமை ஆசாரியனாக இருந்த தியாப்பிலஸ் என்பவரிடமிருந்து (ஜோசிபஸ் Ant. 18 5:3). அதிகாரப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டு, எருசலேமிலிருந்து ஏறத்தாழ 150 மைல் தொலைவிலிருந்த தமஸ்கு நோக்கிச் சென்றார். பவுலுடன் வேறு பலரும் சென்றார்கள் (அப். 9:7; 22:9), பவுல் தலைமை ஆசாரியனிடமிருந்து அதிகாரப் பத்திரத்தைப் பெற்றது ரோமப் பேரரசுக்குள் இருந்த அனைத்துத் தொழுகைக் கூடங்களின் மேல் தலைமை ஆசாரியனுக்கு இருந்த அதிகாரத்தையும், செல்வாக்கையும் காட்டுகின்றது. ரோமர்கள் யூதர்களுக்குச் சமய சுதந்திரம் தந்திருந்ததையும் இது வெளிப்படுத்துகின்றது.

பவுல் தமஸ்குவிற்குச் சென்றபோது ஓர் யூத ரபியாகவும், தலைமை ஆசாரியனிடம் அதிகாரப் பத்திரம் பெறும் தகுதியுடைய சிறந்த கல்வியறிவும் செல்வாக்கும் உடையவராகவும் சனகரீம் சங்கத்தின் அங்கத்தினராகவும் இருந்தார் என J. எரமியாஸ் கூறுகிறார். அப். 26:10ல் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதற்குத் தன் சம்மதத்தைத் தெரிவித்தார் என்ற குறிப்பும் இக்கருத்தை உறுதி செய்கின்றது.

பவுல் தமஸ்க்கு சென்றபோது நடுத்தர வயது உடையவராக இருத்திருக்கவேண்டும் என்கிறார் J. எரமியாஸ். பவுலுக்கு அப்போது 35-40க்குள் வயது இருந்திருக்கலாம். (அப். 7:58). எனவே கிறிஸ்தவர்களைத் துணிவோடும், பலத்தோடும் துன்பப்படுத்தினார். கிறிஸ்தவர்களைச் சாகும்வரைத் துன்புறுத்தினார் (அப். 22:4). ஆனால் இந்த அளவிற்குப் பவுல் துன்பப்படுத்தாமல், யூத ஒழுங்குன் படியான பிரம்பினால் அடித்தலுக்கோ அல்லது அதுபோன்ற துன்பங்களுக்கோ கிறிஸ்தவர்களை பவுல் உள்ளாக்கினார் என்று சில அறிஞர்கள் கருதுகின்றார்கள் (2கொ. 11:24).

அப்போஸ்தலர் நடபடிகள் நூல் பவுல் துன்புறுத்தியதைப் பெருமிதப்படுத்துகின்றது என்கிறார்கள். பவுல் துன்புறுத்தியதில் பெண்களும் உள்ளடங்குகிறார்கள். ஆகவே ஆதித் திருச்சபையில் வைராக்கிய பெண்களும் இருந்தார்கள் என்பதும், பவுலின் துன்புறுத்தலில் இயேசுவின் இறைவாக்கு நிறைவேறுகின்றது என்பதும் உண்மை (மத் 10: 17; மாற். 13:9).

கலா:1:23ன் அடிப்படையில், பவுல் யூதேயாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களையும் துன்புறுத்தினார் என்று கூறமுடியும். இவ்வசனத்தில் வரும் “நம்மைஎன்பது யூதேயா நாட்டுத் திருச்சபைகளையும் குறிக்கும். (கலா. 1:22). ஆகவே யூதேயாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை விட்டு விட்டு, தமஸ்குவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை மட்டும் துன்புறுத்த பவுல் சென்றார் என்று எண்ணுவது பொருந்தாது.

Comments

Popular posts from this blog

பவுலின் பிறப்பு - பவுல் வாழ்க்கை வரலாறு (1)

  பவுலின் காலக் குறிப்புகள் பவுலின் கால நிகழ்ச்சிகளைப்பற்றிய திட்டமான ஆதாரம் இல்லாததால் இதுகாறும் ஓர் திட்டனை கால அட்டவனையை உருவாக்குவதில் அறிஞர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பவுல் முதல் நூற்றாண்டில் சேர்ந்தவர் என்பதும் , ரோம அரசாட்சியின் போது வாழ்ந்தவர் என்பதும் உறுதி. எனவே பவுலின் காலத்தில் , பவுலோடு தொடர்பாக ரோம அரசின் வரலாற்றில் நடந்த ஓரிரு நிகழ்ச்சிகளைப் பவுலின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு , ஓரளவுக்குப் பவுலின் காலத்தைக் கணிக்கலாம்.     பவுலின் பிறப்பு பவுல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த போதிலும் அக்காலத்தில் பாலஸ்தீனாவிலிருந்து இயேசுவைச் சந்தித்ததாக எவ்வித குறிப்பும் அவரது கடிதங்களில் இல்லை. 2 கொரி 5 :16 ன் அடிப்படையிலும் கூட பவுல் இயேசுவைச் சந்தித்தித்திருப்பார் என்று சொல்ல வாய்ப்பில்லை. அப். 7:58, பிலமோன் 9 ஆகிய வசனங்களின் அடிப்படையில் பவுல் கி. பி. 10 க்குப் பின்னர் பிறந்திருக்க முடியாது என்கிறார் ஜோசப் பிட்ஸ்மயர் என்ற அறிஞர். ஏனென்றால் அப்போஸ்தல நடபடிகள் நூலின் படி பவுல் இளைஞன். பிலமோனின் படி பவுல் வயதானவர். பிட்ஸ்மயரின் கருத்துப்படி...

பவுலும் - தர்சு நகரும் (பவுலின் வாழ்க்கை)

  பவுலின் வாழ்க்கையை அறிந்து கொள்ள அவரது கடிதங்கள் , அப்போஸ்தல நடபடிகள் ஆகியவைகள் மட்டுமே நமக்கு ஆதாரங்களாக உள்ளன. இவைகளின் பவுலின் கடிதங்களை முதன்மையான ஆதாரமாகக் கொள்ளலாம். இவைகளின்று பவுலின் வாழ்வில் ஆங்காங்கே நடந்த நிகழ்ச்சிகளை மட்டுமே நாம் அறிய முடியும். அப். 7:58 ல் பவுல் ஓர் வாலிபனாகவும் , பிலமோன் 9 ல் வயதுமிக்கவராகவும் கூறப்படுகின்றார். இந்த இரு நிலைகளுக்கு முன்னும் , பின்னும் எவை எவை நடந்தன என்று ழுழுமையாகக் கூற நமக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. பவுல் ஒரு பரிசேயன் .  கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் இனத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர் பவுல். எபிரேயருக்குப் பிறந்த எபிரேயன். பக்தியும் , செல்வமும் மிக்கக் குடும்பத்தில் தோன்றினவர். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பக்தியிலும் பாரம்பரியத்தினும் சிறந்த பரிசேயக் குழுவைச் சேர்ந்தவர். யூத ஒழுங்கின்படி எட்டாம் நாளில் விருத்தசேதனம் பெற்றவர் (பிலி. 3:5 மு ; ரோ. 11:1) இவருடன் சகோதரிகளும் இவருக்கு இருந்தார்கள் (அப் 23 : 16)  பவுலின் வாழ்விடம் :- பவுல் வாழ்ந்த தர்சு நகரம் சின்ன ஆசியாவின் தென்கரையில் அமைந்திருந்த...

பவுலின் மனமாற்றம் - பவுல் வாழ்க்கை வரலாறு (2)

  பவுலின் இளமைக் காலத்தைப்பற்றிய குறிப்பை அப்போஸ்தலர் நடபடிகள் நூல் தருவதாக மேலே கண்டோம். அதாவது சவுல் இளைஞனாயிருந்தபோது ஸ்தேவானின் மரணத்தில் பெரும் பங்கு வகித்தார் (அப். 7:58; 22:20). ஸ்தேவானின் மரணம் நடந்தது மார்சிலஸ் என்பவர் யூதேயாவின் ஆட்சியாளாக இருந்தபோதுநடந்தது. மார்சிலசுக்கு முன் மாகாணத் தலைவராக இருந்த பொந்தியு பிலாந்து என்பவர் ஆட்சியாளராக இருந்தார். ஆனால் சிரியாவின் உயர் நிலைத் தூதுவர் ( Legate) பிலாத்துவின் மேல் வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் , பிலாத்துவை ரோமாபுரிக்குப் பேரரசனிடம் விசாரணைக்காக அனுப்பிவிட்டு பிலாத்துவுக்குப் பதிலாக மார்சிலஸ் என்பவரை நியமித்தார். இவர் பதவி ஏற்ற காலம்கி.பி 36. இந்த ஆண்டில் தான் ஸ்தேவானின் மரணமும் அதைத் தொடர்ந்து , பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதும் நடந்திருக்க வேண்டும். (அப். 83). பவுலின் தமஸ்கு பயணமும் , அதைத் தொடர்ந்து பவுலின் மனமாற்றமும் கி. பி. 36 ல் நடந்ததாகக் கணிக்கலாம். இந்தக் கணிப்பு ரோமச் சரித்திரத்துடன் நெருங்கியத் தொடர்புடையது. இதன்படி , பவுல் எருசலேம் மன்றத்திற்குச் சென்ற ஆண்டும் கி பி , 49 உடன் ஒத்துப் போகின்றது. ...