Skip to main content

தமஸ்கு அனுபவத்திற்கு முன் பவுல் (பவுலின் வாழ்க்கை)

 

பவுலின் தமஸ்கு அனுபவத்திற்கு முன் பவுல் எப்படிப்பட்டவராய் வாழ்ந்தார் என்பதைச் சிந்தித்தால் தான் தமஸ்கு அனுபவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளமுடியும். பவுல் தனது மனமாற்றத்திற்கு முன் வைராக்கியமுள்ள யூதனாக வாழ்ந்து வந்தார். இந்த வைராக்கியம் அவர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பின்பும் அவரில் காணப்பட்டது என்றால் மிகையாகாது. பவுல் யூதரல்லாதாரிடையே வாழ்ந்திருந்தாலும், யூதச் சமயத்தின் தலையாயக் கோட்பாடாகிய ஓரிறைக் கோட்பாட்டில்(monotheism) அசையாத நம்பிக்கை உடையவராகவே இருந்தார். (கலா. 3:20; ரோ. 3:30). இந்த நம்பிக்கையின் விளைவாக பிறவினச் சமயங்களையும், அவைகளுக்குரிய வழிபாடுகளையும் (1கொ. 10:14, 21). அச்சமயங்களுக்குரிய இழிவான ஒழுக்கக்கேடுகளையும் வன்மையாக எதிர்த்தார் (ரோ. 1:25மு).

யூதத் திருமறையையும் (ரோ1:20;4:3) மோசேயின் மூலம் அருளப்பட்ட நியாயப்பிரமாணத்தையும் (ரோ. 7:12, 14, 16, 22; 3:21) யூதர்களின் பாரம்பரியத்தையும் (கலா. 1:14) அதிகமாக மதித்தார். யூத இலக்கியமான தால்மூட் என்ற நூலில் (பெராகோத்.9:7மு) எழுவகைப் பரிசேயர்களைப் பற்றிய குறிப்பு உள்ளது. அதில் தலைசிறந்த ஏழாவது வகையைச் சேர்ந்தவர் பவுல். அதாவது உயர்ந்த உள்ளம் கொண்ட உண்மைப் பரிசேயனாக வாழ்ந்தவர் பவுல்.

நியாயப் பிரமாணம் இறைவனால் மோசேயின் மூலம் இஸ்ரவேலருக்கு வெளிப்படுத்தப்பட்டது. அதுவே முற்றுப் பெற்றதும், இறுதியானதுமான இறைவனின் வெளிப்பாடு. அதுவே வாழ்வின் மையம். ஆற்றல் மிக்கது. அதன் மூலமாக மட்டுமே ஒருவன் கடவுளுக்கு முன் நீதிமானாக ஆகமுடியும் என்றெல்லாம் நம்பி, நியாயப் பிரமாணமே வாழ்விற்கு வழி என நம்பி வாழ்ந்து வந்தார். நியாயப் பிரமாணத்தைப் பற்றிய இந்தப் பற்றார்வமும், யூதச் சமயத்தைப் பற்றிய வைராக்கியமுமே கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தப் பவுலைத் தூண்டியது.

ஸ்தேவான் நியாயப் பிரமாணத்தால் கடவுளுக்குக் கீழ்படிதலான மக்களை உருவாக்க முடியாது என்று கூறிய போதும் (அப். 7:35மு), மோசேயின் இடத்தில் இயேசுவை வைத்துப் பேசிய போதும் (அப். 6:14) பவுல் எத்தனை ஆத்திரப்பட்டிருப்பார் என்பதை இப்போது நம்மால் உணர முடியும்.

பரிசேயர்களின் எண்ணத்திற்கும் கொள்கைக்கும் விரோதமாக, நியாயப் பிரமாணத்தைக் கடை பிடிக்காத சாதாரண, சமய அறிவே இல்லாத செம்படவர்களுடனும், ஆயக்காரர்களுடனும் கிறிஸ்தவர்கள் கூட்டு வாழ்க்கை நடத்தியதைக் (அப். 4:13) கேள்விப்பட்டப் பவுலுக்கு எழுந்த ஆத்திரம் எவ்வளவு கடினமானது என்பதை இப்போது கற்பனை செய்து பார்க்கலாம். மரத்திலே தூக்கிப் போடப்பட்டவன் சபிக்கப்பட்டவன் (உபா. 21:23) என்று நம்பிய பவுலின் செவிகளில், சிலுவையில் அறையுண்ட இயேசுவே மேசியா (அப். 2:36 மாற். 12:28-34) அவரில் புதுயுகம் பிறந்துவிட்டது என்று கிறிஸ்தவர்கள் அறிவித்த அறிவிப்பு விழுந்தபோது பவுல் கண்டிப்பாக கொதித்து எழுந்திருப்பார். ஆகவே பவுலின் யூதச் சமயப் பற்றார்வமும், அதற்கு எதிராகக் கிறிஸ்தவர்கள் போதித்த போதனையும் பவுலை தமஸ்கு நோக்கிச் செல்லத் தூண்டியது என்பது உண்மையே.

Comments

Popular posts from this blog

பவுலின் பிறப்பு - பவுல் வாழ்க்கை வரலாறு (1)

  பவுலின் காலக் குறிப்புகள் பவுலின் கால நிகழ்ச்சிகளைப்பற்றிய திட்டமான ஆதாரம் இல்லாததால் இதுகாறும் ஓர் திட்டனை கால அட்டவனையை உருவாக்குவதில் அறிஞர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பவுல் முதல் நூற்றாண்டில் சேர்ந்தவர் என்பதும் , ரோம அரசாட்சியின் போது வாழ்ந்தவர் என்பதும் உறுதி. எனவே பவுலின் காலத்தில் , பவுலோடு தொடர்பாக ரோம அரசின் வரலாற்றில் நடந்த ஓரிரு நிகழ்ச்சிகளைப் பவுலின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு , ஓரளவுக்குப் பவுலின் காலத்தைக் கணிக்கலாம்.     பவுலின் பிறப்பு பவுல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த போதிலும் அக்காலத்தில் பாலஸ்தீனாவிலிருந்து இயேசுவைச் சந்தித்ததாக எவ்வித குறிப்பும் அவரது கடிதங்களில் இல்லை. 2 கொரி 5 :16 ன் அடிப்படையிலும் கூட பவுல் இயேசுவைச் சந்தித்தித்திருப்பார் என்று சொல்ல வாய்ப்பில்லை. அப். 7:58, பிலமோன் 9 ஆகிய வசனங்களின் அடிப்படையில் பவுல் கி. பி. 10 க்குப் பின்னர் பிறந்திருக்க முடியாது என்கிறார் ஜோசப் பிட்ஸ்மயர் என்ற அறிஞர். ஏனென்றால் அப்போஸ்தல நடபடிகள் நூலின் படி பவுல் இளைஞன். பிலமோனின் படி பவுல் வயதானவர். பிட்ஸ்மயரின் கருத்துப்படி...

பவுலும் - தர்சு நகரும் (பவுலின் வாழ்க்கை)

  பவுலின் வாழ்க்கையை அறிந்து கொள்ள அவரது கடிதங்கள் , அப்போஸ்தல நடபடிகள் ஆகியவைகள் மட்டுமே நமக்கு ஆதாரங்களாக உள்ளன. இவைகளின் பவுலின் கடிதங்களை முதன்மையான ஆதாரமாகக் கொள்ளலாம். இவைகளின்று பவுலின் வாழ்வில் ஆங்காங்கே நடந்த நிகழ்ச்சிகளை மட்டுமே நாம் அறிய முடியும். அப். 7:58 ல் பவுல் ஓர் வாலிபனாகவும் , பிலமோன் 9 ல் வயதுமிக்கவராகவும் கூறப்படுகின்றார். இந்த இரு நிலைகளுக்கு முன்னும் , பின்னும் எவை எவை நடந்தன என்று ழுழுமையாகக் கூற நமக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. பவுல் ஒரு பரிசேயன் .  கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் இனத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர் பவுல். எபிரேயருக்குப் பிறந்த எபிரேயன். பக்தியும் , செல்வமும் மிக்கக் குடும்பத்தில் தோன்றினவர். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பக்தியிலும் பாரம்பரியத்தினும் சிறந்த பரிசேயக் குழுவைச் சேர்ந்தவர். யூத ஒழுங்கின்படி எட்டாம் நாளில் விருத்தசேதனம் பெற்றவர் (பிலி. 3:5 மு ; ரோ. 11:1) இவருடன் சகோதரிகளும் இவருக்கு இருந்தார்கள் (அப் 23 : 16)  பவுலின் வாழ்விடம் :- பவுல் வாழ்ந்த தர்சு நகரம் சின்ன ஆசியாவின் தென்கரையில் அமைந்திருந்த...

பவுலின் மனமாற்றம் - பவுல் வாழ்க்கை வரலாறு (2)

  பவுலின் இளமைக் காலத்தைப்பற்றிய குறிப்பை அப்போஸ்தலர் நடபடிகள் நூல் தருவதாக மேலே கண்டோம். அதாவது சவுல் இளைஞனாயிருந்தபோது ஸ்தேவானின் மரணத்தில் பெரும் பங்கு வகித்தார் (அப். 7:58; 22:20). ஸ்தேவானின் மரணம் நடந்தது மார்சிலஸ் என்பவர் யூதேயாவின் ஆட்சியாளாக இருந்தபோதுநடந்தது. மார்சிலசுக்கு முன் மாகாணத் தலைவராக இருந்த பொந்தியு பிலாந்து என்பவர் ஆட்சியாளராக இருந்தார். ஆனால் சிரியாவின் உயர் நிலைத் தூதுவர் ( Legate) பிலாத்துவின் மேல் வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் , பிலாத்துவை ரோமாபுரிக்குப் பேரரசனிடம் விசாரணைக்காக அனுப்பிவிட்டு பிலாத்துவுக்குப் பதிலாக மார்சிலஸ் என்பவரை நியமித்தார். இவர் பதவி ஏற்ற காலம்கி.பி 36. இந்த ஆண்டில் தான் ஸ்தேவானின் மரணமும் அதைத் தொடர்ந்து , பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதும் நடந்திருக்க வேண்டும். (அப். 83). பவுலின் தமஸ்கு பயணமும் , அதைத் தொடர்ந்து பவுலின் மனமாற்றமும் கி. பி. 36 ல் நடந்ததாகக் கணிக்கலாம். இந்தக் கணிப்பு ரோமச் சரித்திரத்துடன் நெருங்கியத் தொடர்புடையது. இதன்படி , பவுல் எருசலேம் மன்றத்திற்குச் சென்ற ஆண்டும் கி பி , 49 உடன் ஒத்துப் போகின்றது. ...