பவுல் தமஸ்குவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களைத்
துன்புறுத்தவும்,
அவர்களைக்கட்டி
எருசலேமிற்குக் கொண்டு வரவும் தலைமை ஆசாரியனிடம் அதிகாரப்பத்திரம் வாங்கிக் கொண்டு, தமஸ்கு நோக்கிச்
செல்கையில் உயிர்த்த கிறிஸ்து பவுலைச் சந்தித்தார். இந்நிகழ்ச்சி பவுலின்
வாழ்க்கையில் எண்ணத்தில்,
நோக்கத்தில்
பெரிய மாற்றத்தையே உண்டாக்கியது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டமைக்காக கிறிஸ்தவர்களைத்
துன்புறுத்தச் சென்ற பவுல்,
கிறிஸ்துவுக்காகத்
துன்பப்படத் தன்னைத் தமஸ்கு பாதையில் அர்ப்பணித்தார். (அப். 9:1-22)
தமஸ்கு பயணத்தின் போது தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை தான்
உருவாக்கிய திருச்சபைகளில் பாதிக்கு மேலான சபைகளுக்குத் தெரிவிக்கின்றார். (கலா. 1:11-17; 1கொ 9:1; 15:8; பிலி. 3:6-7) ஆகிய பகுதிகளில்
நேரடியாகத் தன் மனமாற்றத்தை அல்லது தனக்குக் கிடைத்த அழைப்பைப் பற்றிப்
பேசுகின்றார். இதோடு ரோ. 10:2-4;
1கொ. 9:16-17; 2கொ . 3:4-4:6, 5:16; எபே. 3:1-13 கொலோ. 1:23-29; 1தீமோ. 1:11-14 ஆகிய பகுதிகளிலேயும் கூட
பவுல் தன் மனமாற்றத்தைப் பற்றிக் கூறுகின்றார் என்று செயூன் கிம் போன்ற அறிஞர்கள்
கருதுகின்றார்கள். ஒருவேளை நேரடியாக பேசாவிட்டாலும். மறைமுகமாகப் பேசுகின்றார்.
இப்பகுதிகளில் மனமாற்றத்தைப் பற்றியக் குறிப்புகள் இலைமறைக் காய்களாய்
மறைந்திருக்கின்றன என்று கருதுகின்றார்கள்.
பவுலின் கடிதங்களோடு அப்போஸ்தலர் நடபடிகள் நூலிலும்
பவுலின் மனமாற்றம் பற்றி மும்முறை காணப்படுகின்றது. அவற்றில் இரண்டு வரலாறுகள்
பவுலே தன் சுயசரிதையைச் சொல்லுவது அமைந்துள்ளது (அப். 9:1-19; 22:6-16; 26:12-18).
இன்று மனமாற்றத்திற்குத் தரும் விளக்கத்தோடு பவுலின்
மனமாற்றத்தைச் சிந்திக்கக் கூடாது. ஏனென்றால் இன்றைய நிலையில் மனமாற்றம் என்பது, பாவ நிலையிலிருந்து
மனமாறி, பாவமற்ற நிலைக்குள்ளாக
அல்லது முன்பு செய்த பாவங்களை இனி மேல் செய்யாமல் இருக்கும் ஓர் நிலையை அடைவதையே
குறிக்கிறது. ஆனால் பவுலின் வாழ்வில் இப்படிப்பட்ட மனமாற்றம் ஏற்படவில்லை. பவுல்
பாவ வாழ்வினின்று மனமாறி,
பாவமில்லாத
நிலைக்கோ,
அல்லது
கடவுள் நம்பிக்கையின்மையிலிருந்து கடவுள் நம்பிக்கைக்கோ அவர் மனமாறி வந்தார் என்றோ, அல்லது ஒரு சமயத்தினின்று
இன்னொரு சமயத்திற்கு,
இருளினின்ற ஒளிக்கு
பவுல் மனமாறி வந்தார் என்றோ சொல்லமுடியாது. (காண்க. அப். 26:18; ரோ 2:19; எபே 5:8; 1தெ. 5:40).
பவுல் தமஸ்கு பயணத்திற்கு முன்னும், அதற்குப் பின்னும்
நியாயப்பிரமாணத்தின்படி குற்றமற்றவர் (பிலி 3:6; அப். 26:5). யூதருக்குள் அவருடைய வயதுள்ள
பிறரைவிட மேம்பட்டவராய்ப் பவுல் விளங்கினார் (கலா. 1:14). ஆகவே பவுல் மனமாறினார் எனும்போது, பவுலின் இறையியல்
சிந்தனையில் மாற்றம் அல்லது புது எண்ணம் பிறந்தது என்பதே சாலப் பொருத்தமாகும்.
பலர் பவுலின் மனமாற்றம் என்று தமஸ்கு அனுபவத்தைச்
சொல்லக் கூடாது. மனமாற்றம் அல்ல அழைப்பையே பவுல் பெற்றார் என்பார்கள். பவுல்
அழைப்பைப் பெற்றாலும். பவுலின் எண்ணத்திலும் மாற்றம் இருந்தது என்பதை மறுக்க
முடியாது.
பவுல் பெற்ற மனமாற்றத்தில் பின் வரும் அம்சங்களைக்
குறிப்பிட்டுச் செல்லலாம்.
(i)
அவர்
இயேசுவே கிறிஸ்து என ஏற்றுக் கொண்டார்.
(ii)
யூத சமயம்
நீதிச் சட்டத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதைப்பற்றிய உணர்வு பெற்றார்.
(iii)
இயேசுவின்
மூலம் வரும் நீதியாகிய மீட்பு யூதருக்கு மட்டுமுரியதன்று அது அனைவருக்குமுரியது
எனப் புரிந்து கொண்டார். ஆகவே தமஸ்கு பாதையில் மனமாற்றமும், அழைப்பும் பவுலுக்கு
ஏற்பட்டது என்று கூறுவது பொருந்தும்.
Comments
Post a Comment