பவுல் யூதச் சமயக்கல்வியைச் சிறப்பாகக் கற்றுத்
தேர்ந்தவர் (அப் 26:24). இக்கல்வியைத் தலை சிறந்த
பேராசிரியராகிய கமாலியேலிடம் திட்ப நுட்பமாகக் கற்றார் (பிலி 3:5 கலா. 1:14). கமாலியேல் என்பவர் (அப். 22:3). யூதச் சமயக்குழுக்களில்
ஒன்றாகிய ஹில்லேல் (Hillel)
கழகத்தை
உருவாக்கியவராகிய ஹில்லேல் என்பவரின் பேரன். கமாலியேலின் தந்தையின் பெயர்
சிமியோன். யூத ரபிகளுக்குள்ளே எழுவருக்கு மட்டும் தான் யூதர்கள் “ரப்பான்” என்ற உயர்ந்த
மதிப்புமிகுந்த பட்டத்தைக் கொடுத்திருந்தார்கள். அவர்களில் ஹில்லேல், அவரது மகன் சிமியோன்.
அவரது மகன் கமாலியேல் ஆகிய மூவரும் இடம் பெறுகின்றார்கள். ஆகவே பவுலின்
பேராசிரியரைப் போல்,
பவுலும்
அறிவில் தேர்ந்தவராக விளங்கினார் (2கொ.
6:11).
அப்போஸ்தல நடபடிகள் நூல், எருசலேமில் கமாலியேலினிடத்தில்
பவுல் சமயக் கல்வியைக் கற்றார் என்று கூறினாலும் (அப். 22:3; அப். 26:4), புல்ட்மான் போன்ற அறிஞர்கள் இதை
மறுக்கின்றார்கள். இவர்கள் பவுல் தர்சு நகரிலேயே தனது சமயக் கல்வியைக் கற்றார்
என்கின்றார்கள். ஏனென்றால் இவர்களின் கருத்துப்படி, பவுல் தனது மனமாற்றத்திற்குப்பின்
எருசலேம் போகவில்லை (கலா. 1:22,
23). அப்படியே
சென்றிருந்தாலும்,
எருசலேமில்
தங்கி கல்வி பயின்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கின்றார்கள்.
பவுல் தனது மனமாற்றத்திற்கு முன், முப்பெரும் யூதப்
பண்டிகைகளுக்குப் போயிருந்தார் என்று ஒத்துக் கொண்டாலும், எருசலேமில் தங்கி, கமாலியோலிடத்தில் சமயக்
கல்வியைக் கற்றார் என்பதை மறுக்கின்றார்கள். பவுல் எருசலேமில் சமயக் கல்வியைக்
கற்பதற்காகத் தங்கி இருந்திருப்பாரானால், இயேசுவைச்
சந்தித்து இருப்பார். ஆனால் பவுல் இயேசுவைச் சந்தித்ததாக அவரது கடிதங்களில்
எவ்விதக் குறிப்பும் இல்லை . ஸ்தேவானின் இரத்த சாட்சி மரணத்தின் போது பவுல்
எருசலேமிலிருந்தார். ஸ்தேவானைக் கொன்றவர்களின் உடைகளைப் பாதுகாத்தார் (அப் 7:58) என்று அப்போஸ்தல நடபடிகள்
நூல் குறிப்பிட்டாலும்,
அது உண்மைச்
சம்பவம் அல்ல என்றும்,
அப்போஸ்தல நடபடிகள்
நூலின் ஆசிரியர் லூக்கா ,
தான்
சொல்லவேண்டும் என்று விரும்பியதை,
வரலாற்றில்
நடந்த செயல்போன்று சித்தரித்துக் காட்டுகின்றார் என்றும் கூறுகின்றார்கள்.
இக்கருத்தின்படியும்,
பவுல்
எருசலேமில் தங்கி சமயக்கல்வியைக் கற்றார் என்பது பலவீனப்படுகின்றது.
வான் உன்னிக் (Van Unnik) என்ற அறிஞர் பவுல் தர்சுவில்
பிறந்திருந்தாலும்,
எருசலேமிலேயே
வளர்ந்தார் என்றும்,
அவர்
சிறுவனாயிருந்தபோது,
எருசலேமிற்குச்
சென்றிருக்கலாம் என்றும்,
அவ்வாறு
சென்றபோது அவர் அங்கு தனது சமயக் கல்வியைக் கற்றார் என்றும் கூறுகின்றார்.
பவுல் வாழ்ந்த முதல் நூற்றாண்டில், எருசலேமில் 55, 000 மக்கள் வாழ்ந்தார்கள் (J எரேமியாஸ், ''Jerusalem in the
time of Jesus'' - PP. 83-84) என்றும், இவர்கள் அனைவரும்
எருசலேமில் சமயக்கல்வியைப் பயின்ற மாணவர்கள் அனைவரையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை
என்றும் கூறி,
பவுலை
எருசலேம் மக்கள் அறியாமல் போனதற்குரிய காரணத்தைச் சுட்டிக்காட்டுகின்றார்.
கலா. 3:10ன்படி, யூதேயாவில் வாழ்ந்த
யூதமக்கள் அல்ல,
யூதேயாவிலிருந்த
திருச்சபையே பவுலை அறியாமலிருந்தது என்கிறார். இவரின் கருத்துப்படி, பவுல் வயது நிரம்பிய காலத்தில்
தான், கிரேக்க தத்துவங்களையும்
ஏனைய தத்துவங்களையும் அறிந்து கொண்டார் என்கிறார். கலா. 1:13மு; பிலி. 3:5மு ஆகிய பகுதிகளில் பவுல் யூதச்
சமயத்தின் பால் காட்டும் ஆர்வம்,
அந்த
ஆர்வத்திற்கான சமயக் கல்வி ஆகியவை யூதச் சமயத்தின் நடுநாயகமாய் விளங்கிய
எருசலேமில் தான் இருந்தது. வேறு எங்கும், சிதறி
வாழ்ந்த யூதர்களிடையே பரிசேயக்குழு இருக்கவே இல்லை என்று G. போர்ன்காம் கூறுவதை, செயூன் கிம்மும்
ஆதரிக்கின்றார்.
பவுல் தன்னை எபிரேயன் என்று அழைப்பது, பலஸ்தீனாவுடன் நெருங்கிய
தொடர்பு தனக்கு உண்டு என்பதையும்,
சிறிது
காலத்திற்கு முன் தான் பலஸ்தீனாவிலிருந்து வெளியேறி, குடியேறியிருக்கின்றேன்
என்பதையும் காட்டவே என்கிறார் செயூன்கிம்.
பவுலுடைய சகோதரி எருசலேமில் இருந்தார் என்பதும் (அப்.
23:16), தலைமை குருவுடன்
பவுலுக்கு இருந்த தொடர்பும் (அப். 9:20) பவுல்
எருசலேமில் தங்கி கல்வி கற்றிருந்திருக்க வாய்ப்பு இருந்ததை
உறுதிப்படுத்துகின்றது. ஆகவே யூதச் சமயத்தின் மையமான எருசலேமிலேயே பவுல் கல்வி
கற்றார் என்பது பொருத்தமானதே.
பாபிலோனிய தால்மூட் என்ற நூல், ரபிகளின் மாணவர்களுக்கு
கிரேக்கக் கலாச்சாரம் பற்றியும் போதனை கொடுக்கப்பட்டது என்று கூறுகின்றது (Bab. Sota 49p) இதனடிப்படையில், பவுல் கிரேக்க கலாச்சாரம், தத்துவம் போன்றவைகளை, எருசலேமில் தன்
சமயக்கல்வியைக் கற்றக்காலத்திலேயே கற்றார் என்றும், பின்னர் தர்சு நகரில் இவைகளை
இன்னும் தெளிவாகக் கற்றார் என்றும் கூற இடமுண்டு. இவ்வாறே ஏனைய கோட்பாடுகளாகிய
அறிவுநெறிக் கோட்பாடு,
மறைபொருள்
சமயங்கள் ஆகியன பற்றிக் காலப்போக்கில் பவுல் கற்றுக் கொண்டார் என நம்ப இடமுண்டு.
Comments
Post a Comment