இனி பவுலுக்கு அவரது இறையியலைக் தட்டி எழுப்ப பலஸ்தீன
யூதப் பிண்ணனியம் எவ்வாறெல்லாம் உதவியது என்பதனைக் காண்போம். பவுலின் யூதப்
பின்னணியத்தை அறியுமுன் அவர் எப்படிப்பட்ட யூதன் என்பதை அறிதல் நன்று. ஏனென்றால்
அவரது யூதத்தன்மையை அறியும் போது
தான் அவர் எந்த அளவு தன் சொந்த சமயத்தில் அக்கறையும் ஆர்வமும் காட்டினார் என்பதை
விளங்கிக் கொள்ள முடியும்.
தான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பின்னும் கூட பவுல்
தன்னை ஓர் யூதன் என்று அழைத்துக் கொள்வதிலேயே பெருமைக் கொள்கின்றார் (அப். 21:39; 22:3). திரும்பத் திரும்ப தனது
யூதத் தன்மையை வெளிப்படுத்திக் காட்டுகின்றார் (2கொ. 11:22 ரோ. 11:1). தான் ஒரு இஸ்ரவேலன் (2 கொரி. 11:22; ரோ. 11:1), எபிரேயருக்கு பிறந்த
எபிரேயன் திருச் சட்டத்தை கடைப்பிடிப்பதில் பரிசேயன் (பிலி. 3:6 காண்க. அப். 23:6 26:5 காண்க. கலா . 1:14) யூத ரபிகளுக்கெல்லாம் தலை
சிறந்த கமாலியேலிடத்தில் ரபிகளுக்குரிய கல்வியையும் பயிற்சியையும் பெற்றவர் (அப். 22:3) யூதப் பாரம்பரியத்தில்
அளவு கடந்த ஆர்வம் மிக்கவர்,
யூதருக்குள்
அவருடைய வயதுடையோரில் பலரை விட மேம்பட்டவர் (கலா. 1:14) நீதிச் சட்டத்தின்படி
குற்றமற்றவர் (பிலி. 3:6),
ஒரு பக்தி
மிக்க யூதன் கடவுளுக்குத் தன் நன்றியைக் காட்டும் பொருட்டு செய்து கொள்ளும் நசரேய
பொருத்தனையை செய்து தான் ஓர் பக்தி மிக்க யூதன் என்பதை நிருபித்துக் காட்டியவர்
(அப் 21:23,
26) திருச்சட்டம்
பொருளுடையது என நம்பியதால் தான் தனது உடனூழியன் தீமோத்தேயு விருத்தசேதனம் செய்ய
அனுமதித்தவர் (அப்,
16:3. )
தனது நற்செய்தி பயணங்களின் போது முதலில் யூதர்களுக்கே
நற்செய்தி அறிவிக்கின்றார் (அப். 13:46 18:6 23:25மு), யூதர்கள் மீது பாசம்
கொண்டிருந்ததால் தான் யூதர்களின் மீட்பை பற்றி கூறுகின்றார் (ரோம 9-11 1 கொரி9:20). அவர் யூதச் சமயத்தின்பால்
கொண்டிருந்த ஆர்வமே கிறிஸ்தவர்களை துன்புறுத்தத் தூண்டியது. (பிலி3:6 கலா. 13:1 கொ. 15:19 அப். 22:35). எனவே மேற்கண்ட அனைத்தும்
அவர் பக்தி வைராக்கிய மிக்க ஓர் யூதன் என்பதை தெளிவு படுத்து கின்றது.
பவுல் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பின்னரும் கூட
அடிப்படை யூதக் கருத்துக்கள்,
கொள்கைகள்
பழக்க வழக்கங்களை விடவே இல்லை . (அப்24:14-16) ஏனைய யூதர்களைப் போன்று ஒரே கடவுள் கொள்கை (Monotheism) யையே உடையவராக இருந்தார்.
(கலா. 3:20 ரோ 3 : 20) அது மட்டுமல்ல மற்ற
யூதர்களைப் போன்று சிலைகளையும் அதற்குரிய வணக்கத்தையும் (1கொ. 10:14, 21) முக்கியபடுத்திய சமயங்களையும் (கொலோ 2:8) அதனோடு தொடர்புடைய கள
ஒடுக்கத்தையும் (ரோ. 1:26மு) வெறுத்து அவைகளுக்கு
எதிராக பேசினார்.
இஸ்ரவேல் மக்களை கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்
என்ற நம்பிக்கையில் எள்ளளவும் தளர்ச்சி இல்லை (ரோ 11:26 ரோ 9: 4) கடவுளின் திருமொழிகள் இவர்களிடம்
தான் ஒப்படைக்கப்பட்டன என்பதை உறுதிப்படுத்துகின்றார் (ரோ 3 : 2) உடன்படிக்கைகள் நீதிச்சட்டம், ஆலய வழிபாடு, வாக்குறுதிகள் ஆகிய
அனைத்தும் அவர்களுக்கே உரியதாக கருதினார் (ரோ 9:4). ஆபிரகாமை நம்முடைய தந்தை என
அழைக்கின்றார் (ரோ 4:1).
ஈசாக்கை நம்முடைய மூதாதை என்கிறார் (ரோ. 9:10).
திருச்சட்டத்தைப் பற்றிய உயர்வான கருத்தைக்
கொண்டிருந்தார். திருச்சட்டம் இறைவனால் அருளப்பட்டது எண்பதில் பவுலுக்கு ஐயம்
ஏற்படவே இல்லை . நீதிச் சட்டம் தூய்மையானது திருக் கட்டளையும் தூய்மையானது.
நீதியானது (ரோ7:12),
நீதிச்
சட்டம் ஆவிக்குரியது (ரோ7:14),
நீதிச்
சட்டம் நல்லது (ரோ7:16),
ஞானமும்
சத்தியமும் அடங்கியது (ரோ 2:19)
நீதிச்
சட்டத்தின் போதனை கடவுளின் திருவுளத்தை அறியவும் நன்மை தீமையைப் பகுத்தறியவும்
துணை செய்கின்றது (ரோ 2:18)
என்கிறார்.
காலத்தைச் சுட்டிக் காட்ட ரோம நாள் காட்டியை
பயன்படுத்தாமல் யூதத் திருவிழாக்களையும் நாள்களையும் சுட்டிக் காட்டுகின்றார்
(எடு) பெந்தேகோஸ்தே (1கொ. 16:8) பாவ நிவிர்த்தி நோன்பு
நாள் (அப். 27:9)
ஆகும்.
இயேசுவின் முன்னிருத்தலை (pre-existence) விளக்கிக் காட்ட அவருக்கு
யூதச் சமய நம்பிக்கை துணை புரிந்தது. யூதர்கள் வனாந்தரப் பயணத்தில் தங்களோடு
கன்மலையும் தொடர்ந்து வந்தது என நம்பிய நம்பிக்கையை பயன்படுத்தி அந்தக் கன்மலை
கிறிஸ்துவே (1 கொரி 10:4) என்கிறார்.
கடவுள் வரலாற்றில் செயல்படுகின்றார் என்ற உண்மையை
யூத சமயத்தினின்று கற்றுக் கொண்ட பவுல் பழைய ஏற்பாட்டு தீர்க்கர்களைப் போன்றே
கடவுளை மனித வரலாற்றில் செயல்படுபவராகக் காண்கிறார். மனிதனை மீட்பதற்காக பல்வேறு
முயற்சிகளை எடுத்து வரலாற்று நாயகர் இறுதியாக இயேசுவின்மூலம் அம்மீட்பின்
திட்டத்தை நிறைவேற்றினார் என்கிறார் (கலா. 4:4-5) கூட்டாண்மைக்குரிய ஆள் தன்மையை (Corporate
personality) யூதச்
சமயத்தால் அறிந்த பவுல் கிறிஸ்துவுக்குள் என்ற தொடரின் மூலமாக
கிறிஸ்துவுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இருக்கக் கூடிய கூட்டாண்மையை
வெளிப்படுத்திக் காட்டுகின்றார்.
கிறிஸ்தவ நம்பிக்கையைப் பற்றி பேசுவதற்கு பவுலுக்கு
கிரேக்க கருத்து அல்ல யூதக் கருத்தே உதவியது. எதிர் காலத்தில் நடக்கப் போகும்
உயிர்த்தெழுதலின் வாயிலாக கிறிஸ்தவ நம்பிக்கையை வலியுறுத்துகின்றார் (1கொ. 15), இவ்வுயிர்த்தெழுதலைக்
கூறும்போது கிரேக்கர்களின் கருத்துப்படி ஆன்மாவிற்கு மட்டும் என்பதை விடுத்து உடல், உயிர்த்தெழுதலாகிய
யூதக்கருத்தை வலியுறுத்துகின்றார்.
உலகத்தைப் பற்றிக் கூறும் போது, இந்த உலகம் (1கொ. 2:61: 20 ; 2கொ4:4) வரப்போகின்ற உலகம் (எபே 1:21 , 1கொ
6:9 ; 15:50, கலா 5:21) என்று இரண்டாகப் பகுத்து
பேசுவார். இப்படிபகுத்துப்பேசும் போங்கு யூதச்சமயத்தின் மறை பொருள் வெளிப்பாட்டு
இலக்கியங்களில் காணப்படும் ஒன்று. இதோடு பவுலின் இறுதியியல் கருத்துக்கள்
அனைத்தும் யூத மறை பொருள் வெளிபாட்டு இலக்கியத்தில் காணப்படும் கருத்துக்களே.
யூதச் சமய இறை வாக்குறைப்போர்களைப் போன்றே பவுலும் இயேசுவின் இரண்டாம் வருகையை
கர்த்தருடைய நாள் (1 தெச 5:2 , 2
தெச 2:2 , 1 கொ1:8 , 2கொ.
1:14 ; 5:9 பிலி 1:5,6) ஆண்டவராகிய இயேசு
கிறிஸ்துவின் நாள் என்று குறிப்பிடுகின்றார் (காண்க. ஆமோஸ் 5:9).
பவுல் ஓர் யூதனாக மேசியாவைப் பற்றிய நம்பிக்கையை
கொண்டிருந்ததால் இயேசுவை மேசியாவாக அவரால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடிந்தது எனலாம்.
இதில் மற்ற யூதர்களினின்று பவுல் வேறுபட்டாலும் மேசியாவைப் பற்றிய எதிர் நோக்கு
யூதச் சமயம் பவுலுக்குத் தந்த வரப் பிரசாதம். அந்த எதிர் நோக்கே இயேசுவை மேசியாவாக
பவுலை ஏற்றுக் கொள்ளும்படி செய்தது.
பவுலின் விளக்க உரை ரபிகளின் இலக்கியத்தில்
காணப்படும் விளக்க உரையைப் போன்றிருக்கின்றது. அமைப்பில் மட்டுமன்று உள்ளடக்கமும்
யூத ரபிகளின் முறைமைக்குரியதாக இருக்கின்றது. இவருக்கு இந்த அனுபவம் யூதச்
சமயத்தின் மூலம் கிடைத்தது என்பது தெளிவு. தான் ஒரு ரபிக்குரிய பயிற்சியை
எடுத்ததாலோ அல்லது ரபிகளின் இலக்கியங்களைக் கற்றதாலோ இப்படிப்பட்டமுறையை அவர் பயன்படுத்தியிருக்கின்றார் எனலாம். ஆனால்
ஒரு சில அறிஞர்கள் ரபிகளின் இலக்கியம் பவுலுக்குப் பின்னால் எழுந்ததால் பவுல்
அதைப் பயன்படுத்தியிருக்க முடியாது என்பர்.
ரபிகள் பயன்படுத்திய Haggadah முறையை பவுலும் பயன்படுத்தினார்
(கலா 3:19 கலா 3:17 1கொ. 10:4).
ஆதாம். ஆபிராகம், ஈசாக்கு போன்ற பழைய ஏற்பாட்டு
ஆள்களைப்பற்றி அவருக்கு யூதச் சமயம் தந்த அறிவைக் கொண்டு அதே ஆள்களை உதாரணமாகக்
கொண்டு தனது கிறிஸ்தவ இறையியலை அமைக்க அவரால் முடிந்தது (ரோ 5:15).
இவ்வாறு தாய் சமயம் தந்த அறிவால், பவுலின் பெரும்பகுதியான
இறையியல் கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
Comments
Post a Comment