Skip to main content

யூதரல்லாதோரிடையே பவுலின் பணி (பவுலின் நற்செய்திப் பணி)

 

பவுல் தன் மனமாற்றத்தைத் தொடர்ந்து நற்செய்திப் பணி செய்தார். தான் யூதரல்லாதோரின் அப்போஸ்தலன் என்று பவுல் கருதினாலும், முதலில் யூதர்களிடமே அவர் பணியாற்றினார் மன மாற்றத்திற்குப் பின் தமஸ்குவில் நற்செய்திப் பணியை முதலில் யூதர்களிடமே கூறினார் (அப். 9:19-22). அவர் சென்ற மூன்று நற்செய்திப் பயணங்களிலேயும் கூட முதலில் யூதர்களின் தொழுகைக்கூடங்களுக்கே சென்று போதித்தார் (அப். 13:5-14; 14:1; 17:10, 10, 17; 18:4, 19; 19:8). யூதர்கள் அவர் கூறியதை ஏற்றுக்கொள்ளாத போதுதான், யூதரல்லாதாரிடையே சென்று பணியாற்றினார். இதனடிப்படையில், “யூதரிடையே தனக்கு வரவேற்பு இல்லை என்றும், அதே நேரத்தில் யூதரல்லாதாரிடையே தனக்கு வரவேற்பு இருக்கிறது என்பதையும் உணர்ந்த பவுல் தன்னை யூதரல்லாதாரின் அப்போஸ்தலனாகப் பறை சாற்றிக் கொண்டார் என்று சிலர் எண்ணுகின்றார்கள். இது உண்மையாயினும்கூட, பவுலை முற்றிலும் யூதரல்லாதாரின் திருப்பணியாளன் என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் யூதர்களை பவுல் ஒரு நாளும் வெறுக்கவே இல்லை. யூதர்களின் மீட்பைப் பற்றிய ஆர்வத்தை அவர் இழக்கவே இல்லை.

கடவுளின் திட்டப்படி எல்லா இஸ்ரவேலரும் கடைசியில் மீட்கப்படுவார்கள் என்றே பவுல் நம்பினார் (ரோ. 1:16, 9:16மு, 11:130), அதோடு யூதர், யூதரல்லாதார் ஆகியோரிடையே பவுல் நற்செய்திப்பணி ஆற்றினார் என்பதும் தெளிவு (1கொ. 9:20மு; 2கொ. 11:24; 1தெச. 2:15மு; அப். 9:15, 22:15).

பவுல் தனது மனமாற்றத்தைத் தொடர்ந்து தமஸ்குவில் மூன்று ஆண்டுகள் நற்செய்திப்பணி செய்தார். (கலா. 1:17-18, அப். 9:19-22) அதன்பின் சீரியா, சிலிசியா நாட்டுப் பகுதிகளில் பணி செய்தார் (கலா. 1:21). இதற்குப்பின் தான் வாழ்ந்த தர்சு நகரில் தங்கினார். இங்கிருக்கும் போதும் நற்செய்திப் பணி செய்தார் என்பதை நம்பலாம் (அப். 9:30, 11:25). இதைத் தொடர்ந்து பர்னபாவுடன் சேர்ந்து அந்தியோகியா சென்று அங்கு ஓராண்டு காலம் பணியாற்றினார் (அப். 11:26).

பவுல் அந்தியோகியாவிலிருக்கும்போது பரிசுத்த ஆவியானவரால் தெரிந்துகொள்ளப்பட்டு, மூன்று மிஷனரிப் பயணங்களை மேற்கொண்டு, சின்ன ஆசியா, ஐரோப்பா போன்ற பல்வேறு நாடுகளில் பல திருச்சபைகளை உருவாக்கிப் பலரைக் கிறிஸ்துவை நம்பும்படி செய்தார்.

ரோமாபுரி சிறையிருப்புக்குப் பின் விடுதலைப் பெற்று ஸ்பெயின் நாட்டில் தான் நினைத்தபடியே நற்செய்திப்பணி செய்திருக்கலாம் (ரோ. 15:24-25). இங்ஙனம் யூதரல்லாதாரிடையே பவுல் பெரும்பணி ஆற்றினார். எல்லோரையும் விட உண்மையிலேயே நற்செய்திக்காக அதிகமாக உழைத்தார் (1 கொ. 15:10). அதிகமாக துன்பத்தை அனுபவித்தார். (2 கொ. 11:23 மு). இருப்பினும் பவுல் தான் முதன் முதலில் யூகரல்லாதாரிடையே உழைத்த முதல் நற்செய்தித் தொண்டர் என்றோ அல்லது அவர் மட்டும் தான் யூதரல்லாதாரிடையே உழைத்த அருட்செய்திப் பணியாளர் என்றோ கூறமுடியாது. ஏனென்றால் பவுலுக்கு முன்னரேயே பர்னபா அருதொண்டனாக யூதரல்லாதாரிடையே பணியாற்றியிருக்கின்றார். இவர் எருசலேம் திருச்சபையால் அந்தியோகியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் (அப். 11:20-22).

பவுலின் மனமாற்றத்திற்கு முன்னரேயே, தமஸ்குவில் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் (அப். 9:20). ஸ்தேவானின் மரணத்தையொட்டி உண்டான துன்புறுத்தலினால் சிதறுண்டவர்கள் பெனிக்கியா நாடு, சீப்புரு தீவு, அந்தியோகியா நகரம் வரைக்கும் சென்று தங்கி நற்செய்தியை அறிவித்து வந்தார்கள் (அப். 11:19). அந்தியோகியாவில் ஓர் பெரிய திருச்சபையே இருந்தது (அப். 11:21, 24, 26).

ரோமத் திருச்சபையும், கொலேசே நாட்டுத் திருச்சபையும் பவுலால் உருவாக்கப்படாமல் வேறு ஒருவரால் உருவாக்கப்பட்டிருந்தன. இவ்வாறு பவுலுக்கு முன்னேயும், பவுலின் காலத்திலேயும் யூதரல்லாதாரிடையே நற்செய்திப்பணி ஆற்றினவர்கள் பலர் இருந்தார்கள். இருந்தாலும் எருசலேம் துவங்கி ரோமாபுரி வரைக்கும் உள்ள பல நாடுகளில் அயராது உழைத்து, அருட்செய்தியை அறிவித்து, சபைகளை உருவாக்கி, அதனால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளான ஒரே நற்செய்தித் தொண்டன் பவுல்தான்.

பவுல் இதுவரை கிறிஸ்துவின் பெயர் அறிவிக்கப்படாத இடங்களில் மட்டும் நற்செய்தியை அறிவித்தவர் (ரோ. 15:20). மற்றவர்களுடைய உழைப்பில் பெருமை கொள்ளாதவர். மற்றவர்கள் இட்ட அடி தளத்தின் மீது கட்டாதவர் (ரோ. 15:20, 2கொ. 10:15, 16), தன் சொந்த உழைப்பாலேயே நற்செய்தியை அறிவித்தவர். எனவே நற்செய்தியின் பொருட்டு யாருக்கும் செலவு வைக்கவில்லை (1கொ 9:18;2கொ. 11:7). இத்தனைச் சிறப்பும் பெருமையும் பவுலுக்கு மட்டுமே உரித்தானது.

யூதரல்லாதாரைக் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்படிச் செய்ய ஆவி, உடல், சொல், அரிய செயல்கள் அனைத்தையும் தத்தம் செய்தவர் பவுல் (ரோ. 15:17). மேலும் யூதரல்லாதாருக்கு அப்போஸ்தலனாக இருப்பதைப் பற்றி பெருமை பாராட்டினார் (11:13). யூதரல்லாதாரிடையே பவுல் கடினமாக உழைத்ததினால் பல திருச்சபைகளை உருவாக்கினார் என்பதும், பவுல் இத்தனைச் சிறப்பான பணி செய்திருந்தாலும், எருசலேமிலிருந்து வந்த தீவிர யூதக் கிறிஸ்தவர்கள் பவுல் பணியாற்றிய இடங்களில் எல்லாம் சென்று, பவுலைப் பற்றியும் அவரது அப்போஸ்தலத் தன்மைப்பற்றியும், பவுலின் ஊழியத்தைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசி, பவுலையும் அவரது பணியையும் எதிர்த்தார்கள் என்பது உண்மை.

பவுல் நினைத்திருந்தால் இவர்களின் தொந்தரவுனின்று நீங்கி புறவினச் சபைகளை ஒன்றாக்கி ஒரு தனித் திருமண்டிலமாகவே செய்திருக்க முடியும். எருசலேமோடுள்ள உறவைத் துண்டித்திருக்க முடியும். ஆனால் பவுல் அப்படி ஒருபோதும் சிந்திக்கவே இல்லை. தாய்த்திருச்சபையோடு இருந்த அன்பு எள்ளளவும் குறையவே இல்லை. எப்போதும் எருசலேம் தாய்த்திருச்சபையோடு தொடர்பு கொண்டிருந்தார். உறவு கொண்டிருந்தார். எடுத்துக்காட்டாக யூதரல்லாதவர்களைத் திருச்சபையில் சேர்க்கலாமா, கூடாதா என்ற கேள்வி எழுந்தபோது, அந்தப் பிரச்சனையை எருசலேம் திருச்சபைக்கு எடுத்து வந்து, அப்போஸ்தலர்களோடும், மற்றவர்களோடும், கலந்து ஆலோசித்து அவர்கள் எடுத்த முடிவையே பவுல் ஏற்றுக் கொண்டார் (அப். அதி. 15). இதுமட்டுமல்ல, தனக்கு முன் இயேசுவுடன் வாழ்ந்து அப்போஸ்தலர்களாய் இருந்தவர்களை பவுல் மதித்தார் (கலா. 2:10). அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, வறுமைக்குள்ளான தாய்த் திருச்சபையைத் தாங்கும் எண்ணத்தோடு, அதற்கு நிதி திரட்டிக் கொடுத்தார் (அப். 11:30; ரோ. 15 28-38). இப்பொருள் ஈட்டும் சேவையில் புறவினச் சபைகளை அதிகமாக வற்புறுத்தினார் (1 கொ. 16:1-4; அப். 24:17 2கொ. 9:1-5:8; 18-19). இவ்வாறு பவுல் பிரிவினையையல்ல, உடன் பாட்டையே விரும்பி உழைத்தார்.

சுருங்கக் கூறின், பவுல் ஒரு ஆவிக்குரிய கொலம்பஸ் (Spiritual Columbus) ஆக யூதரல்லாதார் மீட்கப்படும்படி அரும்பாடுபட்டார். நல்ல போராட்டத்தைப் போராடினார்.

Comments

Popular posts from this blog

பவுலின் பிறப்பு - பவுல் வாழ்க்கை வரலாறு (1)

  பவுலின் காலக் குறிப்புகள் பவுலின் கால நிகழ்ச்சிகளைப்பற்றிய திட்டமான ஆதாரம் இல்லாததால் இதுகாறும் ஓர் திட்டனை கால அட்டவனையை உருவாக்குவதில் அறிஞர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பவுல் முதல் நூற்றாண்டில் சேர்ந்தவர் என்பதும் , ரோம அரசாட்சியின் போது வாழ்ந்தவர் என்பதும் உறுதி. எனவே பவுலின் காலத்தில் , பவுலோடு தொடர்பாக ரோம அரசின் வரலாற்றில் நடந்த ஓரிரு நிகழ்ச்சிகளைப் பவுலின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு , ஓரளவுக்குப் பவுலின் காலத்தைக் கணிக்கலாம்.     பவுலின் பிறப்பு பவுல் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த போதிலும் அக்காலத்தில் பாலஸ்தீனாவிலிருந்து இயேசுவைச் சந்தித்ததாக எவ்வித குறிப்பும் அவரது கடிதங்களில் இல்லை. 2 கொரி 5 :16 ன் அடிப்படையிலும் கூட பவுல் இயேசுவைச் சந்தித்தித்திருப்பார் என்று சொல்ல வாய்ப்பில்லை. அப். 7:58, பிலமோன் 9 ஆகிய வசனங்களின் அடிப்படையில் பவுல் கி. பி. 10 க்குப் பின்னர் பிறந்திருக்க முடியாது என்கிறார் ஜோசப் பிட்ஸ்மயர் என்ற அறிஞர். ஏனென்றால் அப்போஸ்தல நடபடிகள் நூலின் படி பவுல் இளைஞன். பிலமோனின் படி பவுல் வயதானவர். பிட்ஸ்மயரின் கருத்துப்படி...

பவுலும் - தர்சு நகரும் (பவுலின் வாழ்க்கை)

  பவுலின் வாழ்க்கையை அறிந்து கொள்ள அவரது கடிதங்கள் , அப்போஸ்தல நடபடிகள் ஆகியவைகள் மட்டுமே நமக்கு ஆதாரங்களாக உள்ளன. இவைகளின் பவுலின் கடிதங்களை முதன்மையான ஆதாரமாகக் கொள்ளலாம். இவைகளின்று பவுலின் வாழ்வில் ஆங்காங்கே நடந்த நிகழ்ச்சிகளை மட்டுமே நாம் அறிய முடியும். அப். 7:58 ல் பவுல் ஓர் வாலிபனாகவும் , பிலமோன் 9 ல் வயதுமிக்கவராகவும் கூறப்படுகின்றார். இந்த இரு நிலைகளுக்கு முன்னும் , பின்னும் எவை எவை நடந்தன என்று ழுழுமையாகக் கூற நமக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. பவுல் ஒரு பரிசேயன் .  கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் இனத்தில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர் பவுல். எபிரேயருக்குப் பிறந்த எபிரேயன். பக்தியும் , செல்வமும் மிக்கக் குடும்பத்தில் தோன்றினவர். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பக்தியிலும் பாரம்பரியத்தினும் சிறந்த பரிசேயக் குழுவைச் சேர்ந்தவர். யூத ஒழுங்கின்படி எட்டாம் நாளில் விருத்தசேதனம் பெற்றவர் (பிலி. 3:5 மு ; ரோ. 11:1) இவருடன் சகோதரிகளும் இவருக்கு இருந்தார்கள் (அப் 23 : 16)  பவுலின் வாழ்விடம் :- பவுல் வாழ்ந்த தர்சு நகரம் சின்ன ஆசியாவின் தென்கரையில் அமைந்திருந்த...

பவுலின் மனமாற்றம் - பவுல் வாழ்க்கை வரலாறு (2)

  பவுலின் இளமைக் காலத்தைப்பற்றிய குறிப்பை அப்போஸ்தலர் நடபடிகள் நூல் தருவதாக மேலே கண்டோம். அதாவது சவுல் இளைஞனாயிருந்தபோது ஸ்தேவானின் மரணத்தில் பெரும் பங்கு வகித்தார் (அப். 7:58; 22:20). ஸ்தேவானின் மரணம் நடந்தது மார்சிலஸ் என்பவர் யூதேயாவின் ஆட்சியாளாக இருந்தபோதுநடந்தது. மார்சிலசுக்கு முன் மாகாணத் தலைவராக இருந்த பொந்தியு பிலாந்து என்பவர் ஆட்சியாளராக இருந்தார். ஆனால் சிரியாவின் உயர் நிலைத் தூதுவர் ( Legate) பிலாத்துவின் மேல் வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் , பிலாத்துவை ரோமாபுரிக்குப் பேரரசனிடம் விசாரணைக்காக அனுப்பிவிட்டு பிலாத்துவுக்குப் பதிலாக மார்சிலஸ் என்பவரை நியமித்தார். இவர் பதவி ஏற்ற காலம்கி.பி 36. இந்த ஆண்டில் தான் ஸ்தேவானின் மரணமும் அதைத் தொடர்ந்து , பவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியதும் நடந்திருக்க வேண்டும். (அப். 83). பவுலின் தமஸ்கு பயணமும் , அதைத் தொடர்ந்து பவுலின் மனமாற்றமும் கி. பி. 36 ல் நடந்ததாகக் கணிக்கலாம். இந்தக் கணிப்பு ரோமச் சரித்திரத்துடன் நெருங்கியத் தொடர்புடையது. இதன்படி , பவுல் எருசலேம் மன்றத்திற்குச் சென்ற ஆண்டும் கி பி , 49 உடன் ஒத்துப் போகின்றது. ...