தமஸ்கு அனுபவம்தான் பவுலின் ஆள் தன்மைக்கும், வாழ்க்கைக்கும், இறையியலுக்கும் காரணமாய்
அமைந்தது. இந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே பவுல் தனது இறையியலைக் கட்டி
எழுப்புகின்றார். பவுலின் இறையியல் இயேசுவின் சிலுவை - உயிர்ப்பு - விண்ணேற்றம்
ஆகியவைகளோடு துவங்குவது குறிப்பிடத்தக்கது. பவுல் தாம் எல்லாவற்றையும் தமஸ்கு
பாதையிலேயே கற்றுக் கொண்டதாகக் கூறுகின்றார் (கலா.1:12). ஆயினும் தமஸ்கு பாதையில் ஏற்பட்ட
வெளிப்பாட்டிலேயே எல்லாவற்றையும் கற்றுக் கொண்டார் என்பதைவிட, தமஸ்கு வெளிப்பாடு போன்ற
பலவெளிப்பாடுகள் வாயிலாகப் பவுல் பலவற்றைக் கற்றுக் கொண்டார் என்று நினைக்கவும்
இடமுண்டு (அப். 22:17;
2கொ. 12). இதோடு கூட, பவுல் அரேபியாலில் தனிமையிலும், (கலா. 1: 17) தமஸ்குவில் சீடர்களோடும்
(அப். 9
: 20 மு), எருசலேமில்
அப்போஸ்தலர்களோடும் (கலா. 1:8)
தங்கி
இருந்தபோதும் பல காரியங்களைத் தெரிந்து கொண்டார் என்று கூறலாம். இவர்களிடமிருந்து
அறியுமுன்,
தான்
துன்புறுத்திய கிறிஸ்தவர்களிடத்திலிருந்து பவுல் பல காரியங்களைப் பற்றி
அறிந்திருந்தார் என்பதும் உண்மையே (அப். 26:11).
தமஸ்கு அனுபவம் பவுலின் இறையியலில் ஏற்பட்ட மாற்றமேயன்றி
வேறொன்றுமில்லை என்று ஏற்கனவே கண்டோம். பிற யூதர்களால் புரிந்து கொள்ள முடியாததைப்
பவுல் தமஸ்கு நிகழ்ச்சியின் வாயிலாகப் புரிந்து கொண்டார். தமஸ்கு நிகழ்ச்சியால்
பவுலில் ஏற்பட்ட மாற்றத்தை ஈண்டு காண்போம்.
1. இயேசுவை சபிக்கப்பட்டவராக
எண்ணியிருந்த பவுல் (காண்க. உபா. 21:23) இப்போது மேசியாவாக ஏற்றுக் கொண்டார். (ரோ. 1:5; 2கொ . 5:16; கலா. 1:16; பிலி, 3:8).
2. தன்னை உயர்ந்த நிலையில் வைத்து நினைத்து
அதன்படி வாழ்ந்த பவுல்,
இப்போது சாதாரண
மக்களின் தொண்டனாக மாறினார் (1கொ . 1:26).
3. கடவுள் தன் இனத்தை மட்டுமே
தெரிந்து கொண்டார் என்றும்,
தங்களுக்கே
கடவுள் தம்மை வெளிப்படுத்தினார் என்றும் நம்பிய பவுல், யூதரல்லாதவர்களும்
கடவுளின் மக்களே அவர்களும் ஆசிக்குரியவர்களே என்ற உண்மையை உணர்ந்தார். (கலா . 3:28).
4. மீட்பு இஸ்ரவேலருக்கு மட்டுமே
உரியது. மேசியா என்ற மீட்பரைக் கடவுள் அனுப்பி யூதர்களையே மீட்பார். கடவுளின்
அரசில் யூதர்களுக்கு மட்டுமே இடமுண்டு என நம்பிய பவுல், இப்போது மீட்பும், மீட்பரும்
எல்லாருக்குமுரியவை (ரோ. 3:22)
கடவுள்
பாரபட்சமற்றவர் என நம்பினார்.
5. கடவுளுக்கு முன் ஒருவன்
ஏற்புடையோனாக மாற நியாயப் பிரமாணத்தாலேயே முடியும் என நம்பிய பவுல், இப்போது நியாயப் பிரமாணம்
அல்ல, கிறிஸ்துவில் வைக்கும்
நம்பிக்கையினாலேயே அது ஆகும் என நம்பினார். (ரோ. 1:16, 17; 3:21மு) ஆபகூக் 2:4.
6. கடவுளின் வெளிப்பாடு
நியாயப்பிரமாணம் என்றும் இதுவே இறுதியான கடவுளின் வெளிப்பாடு என்றும் நம்பிய பவுல், இப்போது, நியாயப் பிரமாணத்திற்கு
வெளியேயும் தம்மை வெளிப்படுத்துகின்றார் என நம்பத் துவங்கினார் (ரோ. 3:21). இயேசுவும் கடவுளின்
வெளிப்பாடு என்பதை உறுதியாக நம்பினார் (கலா 4:40)
7. மேசியா வரும்போது இப்போது இருக்கின்ற
நியாயப்பிரமாணத்தை இல்லாமல் செய்வார் அல்லது அதற்குப் புதிய விளக்கத்தைத் தருவார்
என்று பிற யூதர்களைப் போல் தமஸ்கு நிகழ்ச்சிக்கு முன் நம்பின பவுல், இப்போது நியாயப்பிரமாணம்
இயேசு கிறிஸ்துவில் தன் முடிவைக் கண்டது (ரோ. 10:4) என்றும், மேசியாவாகிய இயேசுவை, உலகிற்குரிய
மேசியாவாக நம்பாமல் விடுதலை அளிப்பவராக நம்பினார். (1கொ. 1:23; 2கொ. 13:4 ; ரோ. 1:3-4).
8. கடவுள் வரலாற்றில்
செயல்படுகின்றவர் என்பதை ஏனைய யூதர்களைப் போல் பவுலும் நம்பினார். ஆனால்
வரலாற்றில் செயல்படும் கடவுள் தான் கிறிஸ்துவின் மூலம் செயல்பட்டார் என்ற
நம்பிக்கை பவுலுக்கு தமஸ்கு அனுபவத்தால் கிட்டியது (கலா. 4:40). கடவுளின் மீட்பின் திட்டம்
கிறிஸ்துவில் துவங்கிவிட்டது. (பிலி. 3:20-21; கொலோ . 1:18; ரோ.
8:29) என்றும் நம்பினார்.
9. கடவுளின் அரசு இறுதியில் வரும்
என்று ஏனைய யூதர்களைப்போல் நம்பிய பவுல், இப்போது
அந்த அரசு கிறிஸ்துவில் வந்துள்ளது (கொலோ. 1: 13). அது முழுமையாக எதிர்காலத்தில்
வரும் என்று நம்பினார்
10 தமஸ்கு நிகழ்ச்சியினால் பவுலின்
எண்ணத்தில் மட்டுமல்லாது அவரது பணியிலும் மாற்றம் ஏற்பட்டது. இந்நிகழ்ச்சிக்கும்
பின் தன்னை யூதரல்லாதாருக்கு அருட்செய்தித் தொண்டனாக ஆக்கிக்கொண்டார் (கலா. 1:16). பவுல் தனது மனமாற்றத்தை
பற்றிக் கூறுமிடமெல்லாம்,
தான்
அருட்செய்தித் தொண்டனாக அழைக்கப்பட்டதையும் சேர்த்தே பேசுகிறார் (கலா. 1:13-17; 1கொ 15:5-10; 9:1 பிலி, 3:4-11; 2கொ. 3:4-4:6; 5:16-21 அப். 9:1-19; 22. 6-16;
26:12-18).
அருட்செய்தித் தொண்டனாக இருப்பதற்குரிய முக்கிய தகுதியாகிய
உயிர்த்த ஆண்டவரைத் தரிசித்த தகுதி (அப். 1:21-22) தனக்கும் உண்டு (1கொ. 15:8; 9:1; கலா. 1:16) என்றும், தான் தனது தாயின் கருவில்
இருக்கும்போதே கடவுள் தமது திட்டப்படி அழைத்திருக்கின்றார் (கலா. 1:15) என்றும், பழையஏற்பாட்டு தீர்க்கர்களைப்
போன்று (ஏசாயா,
49:1; எரேமியா.
1:5) பவுல் நம்பினார்.
கடவுளின் பணியைச் செய்வதில் தங்களை அடிமைகளாக்கின (Servant of yahweh) மோசே (2இரா. 18:2) தாவீது போல் (சங். 78:70) தன்னையும் கிறிஸ்துவின்
அடிமையாகக் கருதினார் (கலா. 1:15).
இவ்வாறு
பவுலின் எண்ணத்தில் புத்துணர்வும், பணியில்
மாற்றத்தையும் தமஸ்கு நிகழ்ச்சி பவுலுக்கு வழங்கியது. சுருங்கக் கூறினால்
கிறிஸ்துவின் பெயரைத் தாங்கினவர்களைத் துன்புறுத்திய பவுல், கிறிஸ்துவுக்காகத்
துன்பப்பட தீர்மானித்தார். (2 கொ. 11:23மு).
கிறிஸ்துவின் எதிரியாயிருந்தவர் அவரின் அருட்தொன்டனாக
மாறினார். பரிசேயனாயிருந்தவர் கிறிஸ்தவனாக ஆனார்.
Comments
Post a Comment